நாயிடம் சிக்காமல் சென்று கேமராவில் சிக்கிய திருடன்!

PARIS TAMIL  PARIS TAMIL
நாயிடம் சிக்காமல் சென்று கேமராவில் சிக்கிய திருடன்!

அமெரிக்காவின் மசசூசெட்ஸ் மாநிலத்தில் இம்மாதத் தொடக்கத்தில் நடைபெற்றது விநோதச் சம்பவம் ஒன்று.
 
ஆளில்லா வீட்டுக்குள் புகுந்தான் திருடன் ஒருவன். வீட்டில் ஆளில்லை என்றாலும் குடும்ப நாய் மட்டும் இருந்தது.
 
திருடனைக் கண்டாலும் வீட்டிற்குள் இருந்த நாய், ஏனோ அவனைப் பார்த்துக் குரைக்கவில்லை...
 
மாறாக நாய் அதன் வாலை ஆட்டிய வண்ணம் திருடனை உற்சாகமாக வரவேற்றது.
 
வீட்டிலுள்ள பொருட்களைத் திருட ஓர் அறையிலிருந்து மற்றோர் அறைக்குச் சென்ற திருடனைப் பாசத்தோடு பின்தொடர்ந்தது நாய்.
 
வீட்டின் கதவைத் திறந்து வெளியேறிய திருடன், நாய் தன்னோடு வெளியே வந்து விடாமல் இருக்க கதவை இழுத்துச் சாத்தினான்.
 
வீட்டைக் காவல் காக்க வேண்டிய நாய் தன் கடமையில் தவறினாலும், வீட்டிற்குள் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்புக் கேமரா தனது வேலையைக் கச்சிதமாகச் செய்து முடித்தது.
 
கேமரா இருப்பதை உணர்ந்த திருடன் டி-சட்டையால் முகத்தை மூடிக் கொண்டாலும் திருடனைப் பிடித்துவிட முடியும் என நம்புகிறது காவல்துறை.
 
திருடனும் நாயும் உள்ள காணொளியைக் காவல்துறை பொது மக்களின் பார்வைக்கு வெளியிட்டுள்ளது.  
 

மூலக்கதை