கிரிக்கெட் ரசிகர்களுக்கு ஒரு சோகமான செய்தி!!!

PARIS TAMIL  PARIS TAMIL
கிரிக்கெட் ரசிகர்களுக்கு ஒரு சோகமான செய்தி!!!

தென்னாபிரிக்க அணியின் முன்னணி வீரர்களில் ஒருவரும், கிரிக்கெட் ரசிகர்களால் மிஸ்டர் 360 என அழைக்கப்படும் ஏபி டி வில்லியர்ஸ் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெறுவதாக திடீர் அறிவிப்பினை வெளியிட்டுள்ளார்.
 
ஐ.பி.எல். தொடரில் பெங்களூர் அணிக்காக  விளையாடிய வில்லியர்ஸ், போட்டியில் கலந்துக்கொண்ட ஓரிரு நாட்களுக்குள் இந்த முடிவினை அறிவித்துள்ளமை கிரிக்கெட் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
 
கிரிக்கெட் வீரர் என்பதையும் தாண்டி ஒரு நல்ல மனிதர் என்ற அடிப்படையில் உலகளாவிய ரசிகர்களின் மனதை கவர்ந்தவர் ஏபி டி வில்லியர்ஸ். அடுத்த வருடம் உலகக்கிண்ண போட்டிகள் நடைபெறவுள்ள நிலையில் இவரது இந்த திடீர் அறிவிப்பு தென்னாரிக்க ரசிகர்களை ஏமாற்றத்துக்குள்ளாக்கியுள்ளது.
 
தனது ஓய்வு குறித்த காணொளியொன்றை வெளியிட்டுள்ள வில்லியர்ஸ் குறிப்பிட்டுள்ளதாவது,
 
“நான் களைப்படைந்துவிட்டேன். சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து உடனடியாக விடைபெறலாம் என முடிவுசெய்துவிட்டேன். இது ஒரு கடினமான முடிவாக இருக்கலாம். சிறந்த முறையில் கிரிக்கெட் விளையாடி கொண்டிருக்கும் போதே ஓய்வுபெறுவதற்கு தீர்மானித்துள்ளேன்.
 
அவுஸ்திரேலியா மற்றும் இந்திய அணிக்களுக்கு எதிராக சிறந்த தொடர்களில் விளையாடிய பின்னர் ஓய்வுபெறுவதால் இது சரியான தருணம் என நினைக்கிறேன்.  இத்தனை வருடங்களும் எனது கிரிக்கெட் வாழ்க்கைக்கு பூரணமாக உதவிய பயிற்றுவிப்பாளர்கள், நண்பர்கள் மற்றும் தென்னாபிரிக்க கிரிக்கெட் சபை அனைவருக்கும் எனது நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன். அதுமாத்திரமின்றி உலகளாவிய ரீதியில் உள்ள ரசிகர்களுக்கும் எனது நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்” என்றார்.
 
தென்னாபிரிக்க அணியின் தலைவராக செயற்பட்ட வில்லியர்ஸ், பின்னர் தலைவர் பதவியை கைவிட்டு போட்டிகளில் விளையாடினார்.
 
இவர் தென்னாபிரிக்க அணிக்காக 1114 டெஸ்ட், 228 ஒருநாள் மற்றும் 78 இருபதுக்கு-20 போட்டிகளில் விளையாடியுள்ளார். இதில் டெஸ்ட் போட்டிகளில் 22 சதம் மற்றும் 46 அரைச்சதங்கள் அடங்கலாக 8765 ஓட்டங்களை பெற்றுள்ளதுடன்,  228 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 25 சதம் மற்றும் 53 அரைச்சதங்கள் அடங்கலாக 9577 ஓட்டங்களை குவித்துள்ளார்.
 
இதேவேளை இருபதுக்கு-20 போட்டிகளில் அதிரடியாக துடுப்பெடுத்தாடக்கூடிய இவர், 78 போட்டிகளில் 10 அரைச்சதங்கள் அடங்கலாக 1672 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்துள்ளார்.
 
 

I’ve made a big decision today pic.twitter.com/In0jyquPOK

— AB de Villiers (@ABdeVilliers17) May 23, 2018

மூலக்கதை