மருத்துவமனைக்கு சென்ற கமல் மீது வழக்குப்பதிவு

தினமலர்  தினமலர்
மருத்துவமனைக்கு சென்ற கமல் மீது வழக்குப்பதிவு

தூத்துக்குடி, ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்கு தொடர்ந்து கண்டனங்களை பதிவு செய்து வரும் கமல்ஹாசன், இன்று காயம் அடைந்தவர்களை தூத்துக்குடி மருத்துவமனையில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கமல், தூத்துக்குடியில் இன்னும் பதற்றம் ஓயவில்லை. மக்களை மிரட்டுவது அரசுக்கு அழகல்ல. இது போன்ற சம்பவத்திற்கு பொறுப்பேற்று ஆட்சியில் இருப்பவர்கள் தாமாக முன்வந்து பதவி விலகினால் அது அவர்களுக்கான குறைந்தபட்ச தண்டனையாகவே இருக்கும். இதை விட பெரிய தண்டனையை மக்களுக்கு அவர்களுக்கு கொடுப்பார்கள்.

அரசு தனது ஈகோவை விடுத்து போராட்டம் நடத்திய மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்த முன்வர வேண்டும். இத்தனை நாட்களும் அவர்கள் அமைதியான முறையிலேயே போராட்டம் நடத்தினர். ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட வேண்டும், அதுதான் நியாயமானது. ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்துக்கு தடை விதித்தது போதாது. தூத்துக்குடியில் அமைதி ஏற்பட அனைவரும் முயற்சிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

கமல் மீது வழக்குப்பதிவு
இதனிடையே 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் மருத்துவமனைக்கு சென்று கமல் சந்தித்தார். இது தொடர்பாக அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 5 பேருக்கு மேல் மருத்துவமனைக்கு செல்ல கூடாது என்ற நிலையில் கமல் 20 பேருடன் மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.

மூலக்கதை