ஓராண்டாகியும் கிடைக்காத சலுகை; குறுந்தொழில் முனைவோர் கவலை

தினமலர்  தினமலர்
ஓராண்டாகியும் கிடைக்காத சலுகை; குறுந்தொழில் முனைவோர் கவலை

கோவை : இயந்திர கடன்களுக்கான மானியத்தொகை ஓராண்டுக்கு மேல் நிலுவையில் இருப்பதால், மானியத் தொகைக்கும் சேர்த்து வட்டி கட்ட வேண்டிய இக்கட்டான சூழலில் இருக்கிறோம் என, குறுந்தொழில் முனைவோர் கவலை தெரிவிக்கின்றனர்.

குறுந்தொழில்களின் வளர்ச்சிக்கு மத்திய, மாநில அரசுகள் சலுகைகளை வழங்கி வருகின்றன. புதியதாக தொழிலைத் துவங்க, தொழிலை அபிவிருத்தி செய்ய, புதிய இயந்திரங்கள் வாங்க... என, பல்வேறு திட்டங்களின் கீழ் கடன்களை வழங்குவதுடன், கடனில் குறிப்பிட்ட சதவீதத்தை மானியமாகவும் தருகிறது. இருப்பினும் அச்சலுகைகள் உரிய காலத்தில் கிடைக்காததால், பெரும் சிரமத்தில் இருப்பதாக புகார் தெரிவிக்கிறார்கள் குறுந்தொழில் முனைவோர்.

கோவை மாவட்டத்தில், 25 ஆயிரம் குறுந்தொழில் நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. அவற்றின் மூலம் இரண்டு லட்சத்துக்கும் மேலான தொழிலாளர்கள் வேலைவாய்ப்பைப் பெறுகின்றனர். தொழில் துறை நசிவடைந்து காணப்படும் இக்காலகட்டத்தில், அரசின் சலுகைகளைதான் அவர்கள் பெருமளவில் நம்பியுள்ளனர்.

தொழிலாளர்கள் பற்றாக்குறை உள்ளிட்ட காரணங்களால் குறுந்தொழில் முனைவோர் புதிய இயந்திரங்களை நாடிச் செல்ல வேண்டியிருக்கிறது. புதிய இயந்திரங்களை வாங்குவதற்கு வங்கிகளில் வாங்கும் கடன்களுக்கு மத்திய, மாநில அரசுகள் மானியமும் தருகின்றன.

ரூ.25 லட்சத்துக்கும் அதிகமான இயந்திர கடன்களுக்கு, மத்திய அரசு, 15 சதவீத மானியமும், 25 லட்சத்துக்கும் குறைவான இயந்திர கடன்களுக்கு, மாநில அரசு, 25 சதவீத மானியமும் வழங்குகின்றன.இயந்திரக் கடன்கள் வாங்கும்போது, முழு கடனுக்கும் வட்டி கட்டியாக வேண்டும். மானியத் தொகை வங்கிகளுக்கு வந்ததும், கடன்தாரர் பெயரில் டெபாசிட் வைத்துவிடுவார்கள். அதற்கு கிடைக்கும் வட்டியை, கடனுக்கான வட்டிக்குக் கழித்துக் கொள்வார்கள்.

ஆனால், மத்திய, மாநில அரசுகளின் மானியம் ஓராண்டுக்கும் மேலாக வந்து சேராததால், மானியத் தொகைக்கும் சேர்த்து வட்டி கட்ட வேண்டிய சூழலில் குறுந்தொழில் முனைவோர் இருக்கிறார்கள். இந்த கூடுதல் கடன் சுமையால், குறுந்தொழில் முனைவோர் கடும் சிரமத்திற்கு ஆளாகி தவிக்கின்றனர்.

தமிழ்நாடு கைத்தொழில் மற்றும் குறுந்தொழில் முனைவோர் சங்கத்தின் (டேக்ட்) கோவை மாவட்ட தலைவர் ஜேம்ஸ் கூறுகையில், ''மத்திய, மாநில அரசுகள் எங்கள் சிரமத்தைப் புரிந்துகொண்டு, உடனடியாக மானியத் தொகையை வழங்கி, எங்களுக்கு உதவ வேண்டும். வங்கிக்கடன்களுக்கு குறைந்த பட்சம் 9.5 சதவீதத்தில் இருந்து அதிகபட்சம் 13.5 சதவீதம் வரை வட்டி இருக்கிறது. குறுந்தொழில்களுக்கு மட்டும் வட்டி விகிதத்தை ஐந்து சதவீதமாக நிர்ணயிக்க வேண்டும் என்பது எங்களின் நீண்ட கால கோரிக்கை. அப்போதுதான் தொழில் வளர்ச்சி நன்றாக இருக்கும்,'' என்றார்.

25 ஆயிரம் குறுந்தொழில் நிறுவனங்கள்; இரண்டு லட்சம் தொழிலாளர்களின் நலன் கருதி மத்திய, மாநில அரசுகள் மானியத்தை விடுவிக்குமா?

கைக்கு வந்ததும் வழங்கப்படும்!
கோவை மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் அசோகனிடம் இப்பிரச்னை குறித்து கேட்டபோது, ''மத்திய அரசின் வங்கிக்கடன் மானியங்கள், பயனாளிகளின் வங்கிக் கணக்குக்கு நேரடியாக சென்று விடுகின்றன. எனவே, அதுகுறித்து விவரங்கள் எனக்குத் தெரியவில்லை. மாநில அரசின் வங்கிக் கடன் மானியங்கள், 2016 டிசம்பர் வரையில் கொடுக்கப்பட்டு விட்டன. கடந்தாண்டில் தொழில் துறையினருக்கு வழங்கும் மானியத்தை இரு மடங்கு அதிகரித்து உத்தரவிட்டிருக்கிறது மாநில அரசு. அதோடு, அதிக பயனாளிகளுக்கு மானியம் வழங்கப்படும் மாவட்டங்களில் கோவையும் ஒன்று. எனவே, மானிய ஒதுக்கீடு கைக்கு வந்து சேர சற்று தாமதம் ஏற்பட்டிருக்கிறது. வந்ததும் உடனடியாக பயனாளர்களுக்கு வழங்கப்பட்டுவிடும்,'' என்றார்.

மூலக்கதை