திருப்பூர் தொழிற்துறையினர் மீது முதல்வருக்கு... திடீர் கரிசனம்! பிரதமருக்கு கடிதம் எழுதி வலியுறுத்திய முதல்வர்

தினமலர்  தினமலர்
திருப்பூர் தொழிற்துறையினர் மீது முதல்வருக்கு... திடீர் கரிசனம்! பிரதமருக்கு கடிதம் எழுதி வலியுறுத்திய முதல்வர்

திருப்பூர் : திருப்பூர் பின்னலாடை துறையினரின் கோரிக்கைகளை நிறைவேற்றித்தர, பிரதமர் மோடிக்கு, தமிழக முதல்வர் பரிந்துரை கடிதம் அனுப்பியுள்ளார்.

உலகளாவிய வர்த்தக சந்தையில் நிலவும் போட்டிகளை எதிர்கொண்டே, திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் ஆடை வர்த்தகத்தில் ஈடுபடுகின்றனர். வங்கதேசம், வியட்நாம், கம்போடியா போன்ற நாடுகள், சலுகைகளை பயன்படுத்தி, குறைந்த மதிப்பில் ஆடைகளை சந்தைப்படுத்துகின்றன.வர்த்தக போட்டிகளை எதிர்கொள்வதற்கு, மத்திய அரசு வழங்கும் சலுகைகளே, நமது ஏற்றுமதியாளர்களுக்கு கை கொடுக்கிறது.

ஜி.எஸ்.டி.,க்குப்பின், சலுகைகள் குறைக்கப்பட்டதால், வர்த்தக போட்டிகளை எதிர்கொண்டு 'ஆர்டர்'களை பெறுவது, பின்னலாடை ஏற்றுமதியாளர்களுக்கு சிக்கலானதாக உள்ளது. தங்கள் பிரச்னைகளை, வர்த்தகத்துறை, ஜவுளி, நிதித்துறை அமைச்சர்கள், அதிகாரிகளிடம், திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கம் முறையிட்டு வருகிறது; தமிழக முதல்வரையும், இரு முறை சந்தித்து, கோரிக்கைகளை முன்வைத்தனர்.

இந்நிலையில், முதல்வர் பழனிசாமி, பிரதமர் மோடிக்கு பரிந்துரை கடிதம் அனுப்பியுள்ளார். அதில் கூறியிருப்பதாவது;நாட்டில் உள்ள மொத்த நுாற்பாலைகளில், 65 சதவீதம் தமிழகத்தில் உள்ளது. ஜவுளித்துறை சார்ந்து, லட்சக்கணக்கானோர் வேலை வாய்ப்பு பெறுகின்றனர். பின்னலாடை நகரான திருப்பூர், ஆண்டுக்கு, 25 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் ஏற்றுமதி செய்கிறது.

தமிழக ஜவுளித்துறை, சில மாதங்களாக பல்வேறு பிரச்னைகளை சந்தித்து வருகிறது; மத்திய அரசு, ஜவுளித்துறைக்கு கை கொடுக்கவேண்டும். சீரமைக்கப்பட்ட தொழில்நுட்ப மேம்பாட்டு நிதி திட்டத்தில், நிறுவனங்களுக்கான நிதி, அதிகளவு நிலுவை உள்ளது. இதனால், ஜவுளி நிறுவனங்கள், மெஷினரிகள் கொள்முதல் செய்து, விரிவாக்க பணிகளில் ஈடுபடுவது சிக்கலாகியுள்ளது; இத்திட்டத்தில், நிலுவையில் உள்ள தொகைகளை அரசு விடுவிக்க வேண்டும்.

போட்டி நாடுகளைவிட, நமது நாட்டில் உற்பத்தி செய்யப்படும் ஆடைகளின் மதிப்பு, பத்து சதவீதம் அதிகமாக உள்ளது. இதனால், ஏற்றுமதி நிறுவனங்கள், ஆர்டர் பெற முடியாமல் தவிக்கின்றன. டியூட்டி டிராபேக் விகிதத்தை, 5 சதவீதமாக உயர்த்தி வழங்க வேண்டும்; ஸ்டேட்லெவிஸ் நிலுவை தொகையை உடனே வழங்க வேண்டும். சிறு, குறு நிறுவன அமைச்சகம், நிறுத்தி வைத்துள்ள வர்த்தக ஊக்குவிப்பு சலுகை திட்டத்தை (மார்க்கெட்டிங் இன்சென்டிவ் ஸ்கீம்) மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும்.இத்திட்டத்தில், கடந்த நிதியாண்டில் நிலுவையில் உள்ள, 49.01 கோடி ரூபாயை உடனே வழங்கவேண்டும். இவ்வாறு, அந்த கடிதத்தில் முதல்வர் கூறியுள்ளார்.

மூலக்கதை