சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து டி வில்லியர்ஸ் திடீர் ஓய்வு

தினகரன்  தினகரன்
சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து டி வில்லியர்ஸ் திடீர் ஓய்வு

ஜோகன்னஸ்பர்க்: தென் ஆப்ரிக்க அணி அதிரடி வீரர் டி வில்லியர்ஸ், சர்வதேச கிரிகெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக நேற்று திடீர் அறிவிப்பை வெளியிட்டு ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார். ஆப்ரகாம் பெஞ்சமின் டி வில்லியர்ஸ்... ரசிகர்களுக்கு ஏபிடி! தனது அதிரடி பேட்டிங்கால் உலக அளவில் கிரிக்கெட் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தவர். நடப்பு ஐபிஎல் சீசனில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக விளையாடிய டி வில்லியர்ஸ் (34 வயது), லீக் சுற்றில் 12 போட்டியில் களமிறங்கி 480 ரன் (அதிகம் 90*, சராசரி 53.33, அரை சதம் 6, பவுண்டரி 39, சிக்சர் 30) விளாசினார். சன்ரைசர்ஸ் அணியுடன் நடந்த போட்டியில் அலெக்ஸ் ஹேல்ஸ் அடித்த பந்தை எல்லைக்கோட்டுக்கு அருகே நின்றிருந்த டி வில்லியர்ஸ் தாவிப் பறந்து பிடித்த விதம், கிரிக்கெட் உலகையே பிரமிப்பில் ஆழ்த்தியது என்றால் மிகையல்ல. அதிரடி பேட்டிங் மட்டுமல்லாது துடிப்பான பீல்டிங்காலும் ரசிகர்களை மகிழ்வித்த அவர், நேற்று திடீரென ஓய்பு முடிவை அறிவித்து அதிர்ச்சி அளித்தார். தென் ஆப்ரிக்க அணிக்காக 114 டெஸ்ட் போட்டிகளில் 8765 ரன் (அதிகம் 278*, சராசரி 50.66, சதம் 22, அரை சதம் 46) விளாசியுள்ள அவர், விக்கெட் கீப்பராக 222 கேட்ச் மற்றும் 5 ஸ்டம்பிங் செய்துள்ளார். 228 ஒருநாள் போட்டியில் 9577 ரன் (அதிகம் 176, சராசரி 53.50, சதம் 25, அரை சதம் 53, கேட்ச் 176, ஸ்டம்பிங் 5) மற்றும் 78 டி20 போட்டியில் 1672 ரன் குவித்துள்ளார் (அதிகம் 79*, சராசரி 26.12, அரை சதம் 10, கேட்ச் 65, ஸ்டம்பிங் 7). தனது ஓய்வு முடிவு குறித்து நேற்று அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், ‘சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து உடனடியாக ஓய்வு பெற முடிவு செய்துள்ளேன். நீண்ட நாட்களாக சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடி வரும் நிலையில், இளைஞர்களுக்கு வழிவிட்டு விலக இதுவே சரியான தருணம் என நினைக்கிறேன். உண்மையில் நான் மிகவும் சோர்வடைந்து விட்டேன். இது மிகக் கடினமான முடிவு. நன்கு யோசித்த பிறகே இந்த முடிவை எடுத்திருக்கிறேன். ஓரளவு சிறப்பாக விளையாடிக் கொண்டிருக்கும்போதே ஓய்வு பெற விரும்புகிறேன். தென் ஆப்ரிக்க அணிக்காக விளையாடினால் மூன்று வகை கிரிக்கெட்டிலும் விளையாட வேண்டும். இல்லையென்றால் எதிலுமே விளையாடக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறேன். பயிற்சியாளர்கள், சக வீரர்கள் மற்றும் ரசிகர்களுக்கு எனது மனப்பூர்வமான நன்றி. உள்ளூர் கிரிக்கெட்டில் டைட்டன்ஸ் அணிக்காக தொடர்ந்து விளையாடுவேன். வெளிநாடு சென்று விளையாடுவது குறித்து முடிவு செய்யவில்லை. தென் ஆப்ரிக்க அணிக்கு எனது ஆதரவு என்றும் நிலைத்திருக்கும்’ என்று கூறியுள்ளார்.

மூலக்கதை