எலிமினேட் ரவுண்டில் கொல்கத்தா, ராஜஸ்தான் அணிகள் மோதல்: ஈடன் கார்டனில் இன்று பலப்பரீட்சை

தமிழ் முரசு  தமிழ் முரசு
எலிமினேட் ரவுண்டில் கொல்கத்தா, ராஜஸ்தான் அணிகள் மோதல்: ஈடன் கார்டனில் இன்று பலப்பரீட்சை

கொல்கத்தா: ஐபிஎல் தொடரில்  இன்று   கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் முன்னாள் சாம்பியன்களான கொல்கத்தா நைட்ரைடர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ்  அணிகள்   எலிமினேட் ரவுண்டில் மோதுகின்றன. இப்போட்டியில் தோல்வி அடையும் அணி வெளியேறிவிடும் என்பதால் இன்றைய போட்டி  கடுமையானதாக இருக்கும்.

இன்றைய ஆட்டத்தில் தோல்வி அடையும் அணி போட்டியை விட்டு வெளியேற்றப்படும். வெற்றிபெறும்   அணி, முதலாவது தகுதி சுற்றில் தோற்ற ஐதராபாத் அணியுடன் இறுதிப்போட்டிக்கான 2-வது தகுதி சுற்றில் விளையாடும்.

கொல்கத்தா அணி இந்த தொடரில் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த தவறினாலும், சமீபத்திய போட்டிகளில் சிறப்பாகவே விளையாடி வருகிறது. பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என இரண்டிலும் சிறந்து விளங்கும் அந்த அணி இன்றைய போட்டியில் ராஜஸ்தான் அணியை எதிர்கொள்கிறது.
 
பேட்டிங் மற்றும் பவுலிங் என தொடர்ந்து மாஸ் காட்டி வரும் நட்சத்திர வீரரான சுனில் நரைன் கொல்கத்தா அணியின் மிகப்பெரும் பலம் என்பதில் சந்தேகம் இல்லை.

இன்றைய போட்டியிலும் இவர் சிறப்பாக செயல்படும் பட்சத்தில் எதிரணிக்கு நெருக்கடி ஏற்படும். அதேபோல கொல்கத்தா அணியின் மற்றொரு துவக்க வீரரான கிறிஸ் லின்னும் தொடர்ந்து தனது பங்களிப்பை சரியாகவே செய்து வருகிறார்.

இருந்த போதிலும் கடந்த தொடர்களை போன்று இன்னும் தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. ஒருவேளை இன்றைய போட்டியில் கிறிஸ் லின் தனது அதிரடி ஆட்டத்திற்கு திரும்பும் பட்சத்தில் எதிரணி கடும் சவாலை  எதிர்கொள்ளும்.

கொல்கத்தா அணியின் விக்கெட் கீப்பராகவும்,  கேப்டனாகவும் தனது பங்களிப்பை செய்து, கொல்கத்தா அணியை சரியான வழியில் அழைத்து செல்லும் தினேஷ் கார்த்திக், தனது பேட்டிங்கில் இன்னும் கவனம் செலுத்த வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு.

இருப்பினும் சென்னை, பஞ்சாப், ராஜஸ்தான், ஹைதராபாத் அணிகளுக்கு எதிரான போட்டிகளில் இவர் அதிரடியாக விளையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.

பந்துவீச்சாளரான குல்தீப் யாதவ் கொல்கத்தா அணியின் ஒவ்வொரு வெற்றியிலும் மிக முக்கிய பங்காற்றி வருகிறார். இந்திய கிரிக்கெட் அணியின் சீனியர் வீரர்களில் ஒருவரும், கொல்கத்தா அணியின் நட்சத்திர வீரருமான இவர் ஒவ்வொரு போட்டியிலும் தனது பங்களிப்பை கொல்கத்தா அணிக்கு சரியாகவே செய்து வருகிறார். தொடக்கத்தில் தடுமாறிய ராஜஸ்தான் அணி  தட்டுத் தடுமாறி   ‘பிளேஆப்’  சுற்றுக்குள் வந்தது.   இந்த அணியின்  முன்னணி வீரர் ஜோஸ் பட்லர்,  ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் ஆகியோர் கடந்த ஆட்டத்தில் ஆடாமல் இருந்தனர்.

இவர்கள் இல்லாமலும்  கடைசி லீக்கில் பலம் வாய்ந்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவை சாய்த்ததால் ராஜஸ்தான் அணி கூடுதல் நம்பிக்கையுடன் களம் இறங்கும்.

கடந்த சில ஆட்டங்களில் சிறப்பாக செயல்பட்ட சுழற்பந்து வீச்சாளரும், ஆல்ரவுண்டருமான கிருஷ்ணப்பா கவுதம், ஸ்ரேயாஸ் கோபால் ஆகியோர் அந்த அணியின் நம்பிக்கை நட்சத்திரங்களை  தாண்டி அணியினை  மீட்கும் ஆபத்பாந்தவனாக பார்க்கப்படுகிறார்கள்.

முந்தைய தோல்விகளுக்கு பதிலடி கொடுக்கும் முனைப்புடன் ராஜஸ்தான் தயாராகி வருவதால் ஆட்டத்தில் பரபரப்புக்கு குறைவிருக்காது. இந்த ஐபிஎல் சீசனில்  இந்த மைதானத்தில்  நடந்த 7 லீக் ஆட்டங்களில் 2வது பேட் செய்த அணியே 5 முறை வெற்றி பெற்றிருக்கிறது.

விளையாட்டு, திறமைகளை தாண்டி இதை ஒரு செண்டிமென்டாக பார்க்கிறார்கள்.

இந்த செண்டிமென்ட்  இன்றும் ஒர்க் அவுட்  ஆனால் இன்று டாஸ் ஜெயிக்கும் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்ய வாய்ப்பு உள்ளது.

.

மூலக்கதை