கர்நாடக முதல்வராக குமாரசாமி இன்று பதவியேற்பு

தினமலர்  தினமலர்
கர்நாடக முதல்வராக குமாரசாமி இன்று பதவியேற்பு

பெங்களூரு : கர்நாடகா மாநிலத்தின் 24வது முதல்வராக, ம.ஜ.த., தலைவர் எச்.டி.குமாரசாமி இன்று(மே 23) பதவியேற்கிறார். துணை முதல்வர் பதவி, காங்.,கை சேர்ந்த ஜி.பரமேஸ்வராவுக்கு வழங்கப்படுகிறது.

பதவியேற்பு:

கர்நாடக சட்டசபை தேர்தலில், எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், மே, 17ல், பா.ஜ.,வின் எடியூரப்பா முதல்வராக பதவியேற்றார். மே, 19ல் நம்பிக்கை ஓட்டெடுப்புக்கு, முன், அவர் ராஜினாமா செய்தார். இதனால், காங்கிரஸ் - - ம.ஜ.த., கூட்டணி சார்பில், ம.ஜ.த., தலைவர், குமாரசாமியை முதல்வராக பதவி ஏற்கும்படி, கவர்னர் அழைப்பு விடுத்தார். இதைத் தொடர்ந்து, கர்நாடகா முதல்வராக, குமாரசாமி, இன்று மாலை பதவியேற்கிறார்.

துணை முதல்வர்:

காங்.,கை சேர்ந்த மூத்த தலைவர், ஜி.பரமேஸ்வராவுக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்படுகிறது. கர்நாடகா அமைச்சரவையில், முதல்வர், துணை முதல்வர் உட்பட, 34 அமைச்சர்கள் இடம்பெற உள்ளதாக தெரிகிறது. இதில், காங்.,கிற்கு, 22 அமைச்சர் பதவிகளும், ம.ஜ.த.,விற்கு, 12 அமைச்சர் பதவிகளும் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சபாநாயகர் பதவியை, காங்.,கிற்கு அளிக்க, குமாரசாமி ஒப்புக் கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.

தலைவர்கள் பங்கேற்பு:

பெங்களூருவில் நடக்கவுள்ள பதவியேற்பு நிகழ்ச்சியில், காங்., தலைவர் ராகுல், சோனியா, டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். மேலும், மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, மக்கள் நீதி மைய தலைவ, கமல்ஹாசன் உட்பட பல அரசியல் தலைவர்கள், திரையுலக பிரபலங்களும் பங்கேற்கின்றனர்.

அத்தனை சுலபமில்லை:

இந்நிலையில் குமாரசாமி செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது: கர்நாடக முதல்வராக, என் கடமைகளை நிறைவேற்றுவது அத்தனை சுலபமாக இருக்காது என்றே தோன்றுகிறது. காங்., - ம.ஜ.த., கூட்டணி அரசை, அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு வழிநடத்துவது, மிகப் பெரிய சவாலாக இருக்கும். இந்த கூட்டணி அரசை, சிக்கல் இல்லாமல் நடத்த முடியுமா என்ற சந்தேகம், எனக்கு மட்டும் அல்ல; கர்நாடக மக்களுக்கும் இருக்கிறது எனக் கூறினார்.

மூலக்கதை