பணக்கார பிராந்திய கட்சியாக சமாஜ்வாதி விஸ்வரூபம்

தினமலர்  தினமலர்
பணக்கார பிராந்திய கட்சியாக சமாஜ்வாதி விஸ்வரூபம்

புதுடில்லி : பிராந்திய கட்சிகளில், அகிலேஷ் யாதவ் தலைமையிலான, சமாஜ்வாதி, 2017 - 18ம் நிதியாண்டில், 82.76 கோடி ரூபாய் வருவாயுடன், பணக்கார கட்சியாக உருவெடுத்துள்ளது.

இது குறித்து, ஏ.டி.ஆர்., எனப்படும், ஜனநாயக சீர்திருத்தங்கள் கூட்டமைப்பு வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் கூறியிருப்பதாவது: கடந்த, 2017 - 18ம் நிதியாண்டில், 82.76 கோடி ரூபாய் வருமானத்துடன், அதிக வருமானம் பெற்ற கட்சியாக, அகிலேஷ் யாதவ் தலைமையிலான, சமாஜ்வாதி உள்ளது.

இதே காலத்தில், ஆந்திர முதல்வர், சந்திரபாபு நாயுடு தலைமையிலான, தெலுங்கு தேசம், 72.92 கோடி ரூபாய் ஈட்டி உள்ளது. அ.தி.மு.க.,வுக்கு, 48.88 கோடி ரூபாய் வருமானம் கிடைத்துள்ளது.

ரூ.321 கோடி!

நாட்டில், 32 பிராந்திய கட்சிகளின் மொத்த வருமானம், 2017 - 18 நிதியாண்டில், 321.03 கோடி ரூபாயாக உள்ளது. இவற்றில், 14 கட்சி களின் வருமானம் குறைந்துள்ளது; 13 கட்சிகளின் வருமானம் அதிகரித்து உள்ளது. ஜம்மு - காஷ்மீர் முதல்வர், மெஹபூபா முப்தி தலைமையிலான, மக்கள் ஜனநாயகக் கட்சி உள்ளிட்ட ஐந்து கட்சிகள், வருமான வரி கணக்கை, தேர்தல் கமிஷனில் தாக்கல் செய்யவில்லை.

தி.மு.க., - அ.தி.மு.க., - சமாஜ்வாதி ஆகியவை, வருமானத்தை விட அதிகமாக செலவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளன. டில்லி முதல்வர், அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான, ஆம் ஆத்மி கட்சி, ராஷ்ட்ரீய ஜனதா தளம் உள்ளிட்ட, 16 கட்சிகளின் வருமானம் பற்றிய விபரங்கள் கிடைக்கவில்லை. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மூலக்கதை