நாட்டில் அசாதாரண சூழல்: டில்லி ஆர்பிஷப் கடிதத்தால் சர்ச்சை

தினமலர்  தினமலர்
நாட்டில் அசாதாரண சூழல்: டில்லி ஆர்பிஷப் கடிதத்தால் சர்ச்சை

புதுடில்லி: 2019ம் ஆண்டு பார்லி., தேர்தலில் பா.ஜ., தோல்வியடைய இப்போதிருந்தே பிரார்த்தனை செய்ய கிறிஸ்தவ திருச்சபைகளுக்கு டில்லி ஆர்பிஷப் எழுதிய கடிதம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், இந்தியாவில் மதரீதியிலான பாகுபாட்டை அனுமதிக்க மாட்டோம் என கண்டனம் தெரிவித்துள்ளார்.

டில்லி திருச்சபைகளில் ஆர்பிஷப் அனில் கோட்டோ, தனக்கு கீழுள்ள பாதிரியார்களுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். மே 13ம் தேதி கோட்டோ எழுதியுள்ள அக்கடிதத்தில், இந்தியாவில், தற்போது குழப்பமான அரசியல் சூழ்நிலை காணப்படுவதாகவும், 2019 பார்லி., பொதுத் தேர்தலில் பா.ஜ., தோற்க இப்போதிருந்தே பிரார்த்தனை பிரசாரத்தை மேற்கொள்ளும் படியும் குறிப்பிட்டுள்ளார். ஆர்பிஷப்பின் இக்கடித விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தயுள்ளது.

அனுமதிக்க மாட்டோம்:

இந்நிலையில் மதரீதியில் பாகுபாட்டை அனுமதிக்க மாட்டோம் என மத்திய உள்துறை அமைச்சர், ராஜ்நாத் சிங் கோட்டோ கடிதத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

இக்கடித விவகாரம் குறித்து, டில்லியில் எல்லை பாதுகாப்பு படை நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற ராஜ்நாத்சிங் தெரிவித்ததாவது: நம் நாட்டில், மதம், ஜாதி, இனம் அடிப்படையில் பாகுபாடு பார்க்கப்படுவதில்லை. இத்தகைய பாகுபாடுகளை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம். நாட்டின் ஒற்றுமை, ஒருமைப்பாடு, இறையாண்மை விஷயத்தில், ஒருபோதும் சமரசம் செய்து கொள்ள மாட்டோம். நாட்டில் நல்லிணக்கத்தை மேம்படுத்துவதில் மத்திய அரசு உறுதியாக உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

மூலக்கதை