ஒழுங்குமுறை விற்பனை கூடத்துக்கு கிடைத்த வருவாய் ரூ.1.74 கோடி!கடந்தாண்டு, 22,217 மெ.டன் சரக்குகள் கையாண்டது

தினமலர்  தினமலர்

உடுமலை;உடுமலை, ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் கடந்தாண்டு, 22 ஆயிரத்து, 217 மெ.டன் சரக்குகள் கையாளப்பட்டதன் மூலம், 1.74 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது.உடுமலையில், வேளாண் விற்பனை மற்றும் வணிகத்துறை கீழுள்ள, திருப்பூர் விற்பனைக்குழுவின் கீழ் வேளாண் ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் செயல்பட்டு வருகிறது. இங்கு, 7,900 மெ.டன் கொள்ளளவுள்ள, 11 குடோன்கள் மற்றும் உலர்களங்கள் அமைந்துள்ளன. இதுமட்டுமில்லாமல், விவசாயிகளுக்கு தங்கும் வசதிகளும் உள்ளன.
சுற்றுப்பகுதியைச்சேர்ந்த விவசாயிகள் மற்றும் வியாபாரிகள், மக்காச்சோளம், கம்பு, கொண்டக்கடலை, கொத்தமல்லி, கொப்பரை உள்ளிட்ட விளைபொருட்களை இருப்பு வைக்க அறிவுறுத்தப்படுகிறது.இருப்பு வைக்கப்படும் பொருட்களுக்கு, அதன் மதிப்பில், 60 முதல், 70 சதவீதம் வரை பொருளீட்டுக்கடன் வழங்கப் படுகிறது. அதிகபட்சமாக விவசாயிகளுக்கு, 3 லட்சம் ரூபாயும், வியாபாரிகளுக்கு, 2 லட்சம் ரூபாயும் வழங்கப்படுவதாக, விற்பனைக்கூட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.இருப்பு வைக்கப்படும் பொருட்களுக்கு, விவசாயிகளுக்கு 5 சதவீத வட்டியும், வியாபாரிகளுக்கு, 9 சதவீத வட்டியும் வசூலிக்கப்படுகிறது. அதிகப்பட்சமாக, 180 நாட்கள் வரை இருப்பு வைக்க அனுமதிக்கப்படுகிறது.
இதுமட்டுமில்லாமல் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் தேசிய வேளாண் சந்தை திட்டத்தில் நடைபெறும், ஏலத்தில் கலந்துகொண்டு உரிய விலைக்கு விற்பனை செய்வதற்கான வாய்ப்புகளையும் ஏற்படுத்திக்கொடுக்கிறது.இந்நிலையில், கடந்தாண்டு, 22,217 மெ.டன் சரக்குகள் கையாளப்பட்டுள்ளது. இதன் மூலம் விற்பனை கூடத்துக்கு, 1.74 கோடி ரூபாய் வருமானம் கிடைத்துள்ளது. அதில், 1,865 மெ.டன் சரக்குகள் இருப்பு வைக்கப்பட்டு, 18.80 லட்சம் ரூபாய் பொருளீட்டுக்கடன் வழங்கப்பட்டுள்ளது. இதன்மூலம், 246 விவசாயிகள் மற்றும் 80 வியாபாரிகள் பயனடைந்துள்ளனர்.

மூலக்கதை