கோவைக்கு வெள்ள அபாயம்! கோடை மழைக்கு நிரம்பிய குளங்கள்: ஆக்கிரமிப்பின் பிடியில் நீர்வழித்தடங்கள்

தினமலர்  தினமலர்
கோவைக்கு வெள்ள அபாயம்! கோடை மழைக்கு நிரம்பிய குளங்கள்: ஆக்கிரமிப்பின் பிடியில் நீர்வழித்தடங்கள்

வரலாறு காணாத அளவுக்கு, கோடை மழை பெய்ததால், இப்போதே கோவையில் நான்கு குளங்கள் நிரம்பிஇருக்கின்றன; இரு குளங்கள் நிரம்ப உள்ளன. இதனால், தென்மேற்கு பருவ மழையின்போது, வெள்ளப்பெருக்குஏற்படக்கூடிய அபாயம் இருப்பதால், மாற்று நடவடிக்கையில் அதிகாரிகள் ஈடுபட வேண்டிய அவசியம் ஏற்பட்டு உள்ளது.
கோவை மாவட்டத்தில், நொய்யல் வழித்தடத்தில், 24 குளங்கள் உள்ளன. ஒவ்வொரு குளமாக நிரம்பிச் செல்லும் வகையில், நீர் வழித்தடம் மற்றும் கால்வாய்கள் அமைந்திருந்தன. போதியபராமரிப்பின்றி, புதர்மண்டி கால்வாய்கள் சுருங்கி உள்ளன; பல இடங்களில் ஆக்கிரமிப்பால், நீர் வழித்தடமும், கால்வாயும் இருந்த இடம் தெரியாத அளவுக்கு அழிக்கப்பட்டுள்ளன.
இந்த ஆண்டு வரலாறு காணாத அளவுக்கு, கோடை மழை பெய்ததால், கிருஷ்ணாம்பதி, செல்வம்பதி, குமாரசாமி என்கிற முத்தண்ணன், செல்வ சிந்தாமணி குளங்கள் நிரம்பியுள்ளன.செல்வ சிந்தாமணி குளத்தில், கொள்ளளவை காட்டிலும், தற்போது அதிகளவு நீர் தேக்கப்பட்டு உள்ளது. கன மழை பெய்து, வாய்க்காலில் நீர் வரத்து அதிகமானால், கரை உடையக் கூடியஅபாயம் இருக்கிறது.ஒரு வாரத்துக்கு முன், மழை பெய்தபோது, செல்வ சிந்தாமணி குளத்தின் ஷட்டர் திறக்கப்பட்டு, நீர் திறந்து விடப்பட்டது.
உக்கடம் குளத்துக்கு வரும் வழித்தடத்தில் உள்ள கால்வாய் புதர்மண்டி இருப்பதால், கோயமுத்துார் (சேத்துமா வாய்க்கால்) வாய்க்கால் கரையில் இருக்கும் வீடுகளை தண்ணீர் சூழ்ந்தது. இதன் காரணமாக, ஷட்டர் மீண்டும் அடைக்கப்பட்டு உள்ளது.இதற்கு தீர்வு காண, செல்வ சிந்தாமணி குளத்தில் இருந்து உக்கடம் குளத்துக்கு நீர் வரும் கோயமுத்துார் கால்வாயை உடனடியாக துார்வார வேண்டும்.செல்வ சிந்தாமணி குளத்தின் ஷட்டரை சிறிதளவு திறந்து, உக்கடம் குளத்துக்கு நீரை திருப்பி விட வேண்டும். இல்லையெனில், குளக்கரை பலவீனப்பட்டு, குடியிருப்புகளுக்குள் நீர் செல்லக் கூடிய அபாயம் இருக்கிறது.
ஏனெனில், தற்போதுள்ள நிலையில் இன்னும், 2.5 அடிக்கு நீர் கிடைத்தால் போதும்; உக்கடம் குளம் நிரம்பி விடும். 1.5 அடிக்கு நீர் வந்தால் வாலாங்குளம் நிரம்பி விடும். உக்கடம் குளத்தில் இருந்து வாலாங்குளத்துக்கு செல்லும் நீர் வழித்தடம் மிகவும் குறுகலாக இருக்கிறது. அதையும் துார்வார வேண்டும்.
வாலாங்குளத்தில் இருந்து நீரை வெளியேற்றும் பாதை சிறியதாக அமைக்கப்பட்டு உள்ளது. நீரின் அளவு எவ்வளவு அதிகரித்தாலும், குறைந்தளவே வெளியேற்ற முடியும். நீர் வரத்து அதிகரிக்கும் பட்சத்தில், அழுத்தம் தாங்காமல், சுங்கம் பகுதியில் இருந்து அரசு மருத்துவமனைக்கு முன்பு வரையுள்ள குடியிருப்புகளுக்குள், தண்ணீர் திரும்புவதற்கான வாய்ப்பு அதிகமாக உள்ளது.
எனவே, நொய்யலில் நீர்ப்பெருக்கு ஏற்பட்டால், செல்வ சிந்தாமணி குளத்துக்கு அனுப்பாமல், குறிச்சி குளத்துக்கு செல்லும் வகையில், நீரை திருப்பி விட வேண்டும். இவற்றை ஆய்வு செய்து கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டிய பொறுப்பு, பொதுப்பணித்துறை மற்றும் மாநகராட்சி அதிகாரிகளிடம் உள்ளது. இவ்விரு துறையினரும் மிகவும் அஜாக்கிரதையாக செயலாற்றி வருகின்றனர்.
'கவலைப்படுவதில்லை'
கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு ஒருங்கிணைப்பாளர் மணிகண்டன் கூறுகையில், ''குளங்களை மட்டுமே அனைவரும் பார்க்கின்றனர். அதற்கான நீர் வழித்தடம், வெளியேற்றும் பாதை, கால்வாயை பற்றி, கவலைப்படுவதில்லை.''புதர்மண்டி இருக்கும் கால்வாயை சீரமைக்க வேண்டும். குனியமுத்துார் வாய்க்கால், குறிச்சி வாய்க்கால் மற்றும் வெள்ளலுார் வாய்க்காலில் உள்ள ஆக்கிரமிப்புகைளை அகற்ற வேண்டும். சித்திரைச்சாவடி வாய்க்காலில் தண்ணீர் வரும்போது, நரசம்பதி குளத்துக்கு நீரை திருப்பும் வகையில், தடுப்பு ஏற்படுத்த வேண்டும்,'' என்றார்.
'நிலைமையை சமாளிப்போம்'
பொதுப்பணித்துறையினரிடம் கேட்டபோது, 'கோவையில் வெள்ளத்தால் இதுவரை பாதிப்பு ஏற்பட்டதில்லை. ஒவ்வொரு குளத்தில் இருந்தும் நீர் வெளியேற வழி இருப்பதால், பாதிப்பு ஏற்படாது. நகர்ப்பகுதியில் உள்ள குளங்களுக்கு நீர் தேவை இல்லை எனில், பேரூரில் ஷட்டரை மூடி, குறிச்சிக்கு நீரை திருப்பி விடலாம். வெள்ளப்பெருக்கு ஏற்படாமல், நிலைமையை சமாளிப்போம்' என்றனர்.- நமது நிருபர் -

மூலக்கதை