ஆளுங் கட்சியின் ஆடம்பரத்திற்காக போட்டி! 'பெயருக்கு' திறந்த தண்ணீர் பந்தல்கள்

தினமலர்  தினமலர்

விக்கிரவாண்டி பகுதியில், ஆளுங்கட்சியினரிடையே ஆடம்பரத்திற்காக போட்டி போட்டு, பந்தாவாக திறக்கப்பட்ட தண்ணீர் பந்தல்கள் தொடர்ந்து செயல்படாததால், பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.


விழுப்புரம் மாவட்டத்தின் பல பகுதிகளிலும், ஆளும் கட்சியினர்இடையே, அமைச்சர் சண்முகத்தின் ஆதரவாளர்கள் ஒரு பிரிவாகவும், மாவட்ட செயலாளர் எம்.பி., லட்சுமணனின் ஆதரவாளர்கள் ஒருபிரிவாகவும் செயல்பட்டு வருகின்றனர். விக்கிரவாண்டி ஒன்றியத்தில் இவர்களின் போட்டி அரசியல், விறுவிறுப்பு அடைந்துள்ளது. சமீபத்தில் கோடைவெயிலின் தாகத்தை தணிக்க, விக்கிரவாண்டி ஒன்றியத்தில் மிக முக்கிய இடமான தாலுகா அலுவலகம், பஸ் நிலையம் , முண்டியம்பாக்கம் அரசு பொது மருத்துவமனை என ஒன்றியம் முழுவதும் போட்டி போட்டுக் கொண்டு, பொதுமக்கள் கூடும்இடங்களில் வேகவேகமாக மக்களுக்கு சேவை செய்து, கட்சி தலைவரிடம் பாராட்டை பெறுவதற்காக ஆடம்பரமாக விழா நடத்தி, தண்ணீர் பந்தலை திறந்தனர்.திறப்பு விழா நடந்து, இரண்டு நாள் முதல் ஒரு வாரம் வரை குடத்தில், தண்ணீர் நிரப்பி வைத்து, பொதுமக்களுக்கு வழங்கினர். அதன் பிறகு கட்சியினர், கடமைக்காக தண்ணீர் பந்தலை நடத்தியது, பொதுமக்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.காரணம் கடும் வெயில், சித்திரை மாத கத்தரி வெயிலில் தண்ணீர் தாகத்திற்காக தண்ணீர் பந்தலில் உள்ள குடத்தை போய் பார்த்தால், அங்கு ஜோராக கட்சி பெயிண்டுடன் உள்ள குடம் காலியாக காட்சி அளிக்கிறது. இதில் பொதுமக்கள் சிகிச்சைக்கு வந்து செல்லும் முண்டியம்பாக்கம் அரசு பொதுமருத்துவமனையில், ஒன்றிய செயலாளர் ஏற்பாட்டில் திறந்த தண்ணீர் பந்தலில் மூன்றாம் நாளே குடம் காலியாக கிடந்தது.இந்த நிலை அனைத்து பகுதிகளிலும் நிலவுகிறது. கட்சியினர் இலவச தண்ணீர் பந்தலை திறந்து வைத்து விட்டு, பந்தலில் தண்ணீர் இல்லாமல் பொதுமக்கள், அப்பகுதியிலுள்ள பங்க் கடைகளில் காசு கொடுத்து தண்ணீர் வாங்கி குடித்து தாகத்தை தணிக்கின்றனர். தற்பொழுதுள்ள அரசியல் சூழ்நிலையில்ஆளும் கட்சியினர் பொதுமக்களிடத்தில் தங்களது மதிப்பை உயர்த்திக் கொள்வதற்கு, அமைச்சர் மற்றும் மாவட்ட செயலாளர் ஆகியோரை வரவழைத்து, தண்ணீர் பந்தலை திறந்து விடுகின்றனர். அதனை முறையாக பராமரிக்காமல் அலட்சியம் காட்டுவதால், ஆளுங்கட்சிக்கு தான், மக்களிடம் அவப்பெயரை ஏற்படுத்தும் என்பதை அவர்கள் உணரவில்லை.கட்சிக்கு நல்ல பெயரை தேடித் தராவிட்டாலும் பரவாயில்லை, இவர்களது சுய விளம்பரத்திற்காக, ஆளுங்கட்சி மீது பொதுமக்களின் அதிருப்தியை ஏற்படுத்தாமல் இருக்கலாமே என கட்சியின் மூத்த நிர்வாகிகள் ஆதங்கப்பட்டு வருகின்றனர்.நமது நிருபர்-

மூலக்கதை