பாலியல் வீடியோ; கூகுளுக்கு அபராதம்

தினமலர்  தினமலர்
பாலியல் வீடியோ; கூகுளுக்கு அபராதம்

புதுடில்லி: பாலியல் வன்முறை தொடர்பான வீடியோ காட்சிகளை பதிவிடுவதை தடுத்தல், பதிவிட்டோர் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்யாத கூகுள் மற்றும் பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களுக்கு, உச்ச நீதிமன்றம், தலா, ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்துள்ளது.

கடந்த, 2015ல், ஐதராபாதை சேர்ந்த, பிரஜ்வாலா என்ற தன்னார்வலர், அப்போதைய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி, ஹெச்.எல்.தத்துவுக்கு, கடிதம் அனுப்பினார். அதில், 'பேஸ்புக் சமூக வலைதளத்தில் பாலியல் பலாத்கார வீடியோ வெளியிடப்பட்டுள்ளதாகவும், இதுபோன்ற குற்றங்களை தடுக்க வேண்டும்' என, கூறியிருந்தார்.

இதையடுத்து, பாலியல் குற்ற வீடியோக்கள் வெளியிட்டோர் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து, அறிக்கை தாக்கல் செய்யும்படி, யாஹூ, பேஸ்புக், மைக்ரோசாப்ட் மற்றும் வாட்ஸ் ஆப் போன்ற நிறுவனங்களுக்கு ஏற்கனவே உத்தரவிடப்பட்டு இருந்தது.

இந்நிலையில், நேற்று, இந்த வழக்கை விசாரித்த, உச்ச நீதிமன்ற நீதிபதிகள், மதன் பி.லோகுர், யு.யு.லலித் அடங்கிய அமர்வு பிறப்பித்த உத்தரவு: இந்த வழக்கில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து, யாஹூ, பேஸ்புக் - அயர்லாந்து, பேஸ்புக் - இந்தியா, கூகுள் இந்தியா, மைக்ரோசாப்ட் மற்றும் வாட்ஸ் ஆப் ஆகியவை அறிக்கை தாக்கல் செய்யவில்லை.

இவற்றுக்கு தலா, ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படுகிறது. ஜூன் 15க்குள், அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். பாலியல் வன்முறை குறித்து, மக்கள் புகார் அளிக்க, மத்திய அரசு, உடனடியாக ஒரு இணையதள போர்ட்டலை துவக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மூலக்கதை