குதிரை பேர ஆடியோ போலி: காங்., எம்.எல்.ஏ.,

தினமலர்  தினமலர்
குதிரை பேர ஆடியோ போலி: காங்., எம்.எல்.ஏ.,

பெங்களூரு: கர்நாடகாவில், பா.ஜ.,வுக்கு ஆதரவு அளிக்க, தன் மனைவியிடம் பேரம் பேசப்பட்டதாக வெளியான, 'ஆடியோ' போலியானதென, காங்., - எம்.எல்.ஏ., சிவராம் ஹெப்பார் கூறியுள்ளார்.

எல்லபூர் தொகுதியில் போட்டியிட்டு வென்ற, காங்., - எம்.எல்.ஏ., சிவராம் ஹெப்பார், 'பேஸ்புக்' சமூகதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறப்பட்டுள்ளதாவது: பா.ஜ.,வுக்கு ஆதரவு அளிக்க, என் மனைவியுடன், பா.ஜ., தலைவர்கள் பேசியதாக ஆடியோ வெளியானது. அதில் உள்ளது, என் மனைவியின் குரல் அல்ல; பா.ஜ.,வுக்கு ஆதரவு அளிக்கக் கோரி, என் மனைவிக்கு, யாரிடம் இருந்தும் தொலைபேசியில் அழைப்பு வரவில்லை. அவ்வாறு வெளியான ஆடியோ, போலியானது. இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

15 கோடி பேரம்:

சிவராம் ஹெப்பார், சமூக தளத்தில் குறிப்பிட்டுள்ள ஆடியோ, காங்., - எம்.எல்.சி., உக்ரப்பாவால் வெளியிடப்பட்டது. சிவராம் ஹெப்பாரின் மனைவியிடம், பா.ஜ., தலைவர்கள், 15 கோடி ரூபாய் தரத் தயார் எனக் கூறுவதாக, அந்த ஆடியோ அமைந்துள்ளது. அந்த ஆடியோ போலி என, சிவராம் ஹெப்பார் கூறியுள்ளது, சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

அப்பட்டமான பொய்:

இதுகுறித்து, பா.ஜ., தேசிய தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவர், அமித் மாளவியா, 'டுவிட்டர்' சமூகதளத்தில் கூறியுள்ளதாவது: எல்லப்பூர் தொகுதியை சேர்ந்த, காங்., - எம்.எல்.ஏ., தன் மனைவியிடம், பா.ஜ., தலைவர்கள் பேசியதாக வெளியான ஆடியோவை போலி எனத் தெரிவித்துள்ளார். காங்., அப்பட்டமாக பொய் கூறிவந்தது, தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மூலக்கதை