நீர் நிலை ஆக்கிரமிப்பாளர்களுக்கு...2,784 வீடுகள்! அடுக்குமாடி குடியிருப்பு கட்டும் பணி தீவிரம்

தினமலர்  தினமலர்
நீர் நிலை ஆக்கிரமிப்பாளர்களுக்கு...2,784 வீடுகள்! அடுக்குமாடி குடியிருப்பு கட்டும் பணி தீவிரம்

திருப்பூர்:திருப்பூரில், நீர் நிலை ஆக்கிரமிப்பு அகற்றுவதற்காக, ஆக்கிரமிப்பாளர்களுக்கு மாற்று குடியிருப்பு வசதியாக,2,784 வீடுகள் கட்டும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.திருப்பூர் நகரின் மத்தியில், நொய்யல் ஆறு, நல்லாறு மற்றும் சங்கிலிப்பள்ளம், ஜம்மனைப் பள்ளம் ஆகிய துணை ஓடைகள் உள்ளன. நீர் நிலைகளை ஆக்கிரமித்து, ஆபத்தான முறையிலும், சுகாதார மற்ற வகையிலும் ஏராளமானோர் வசித்து வருகின்றனர்.
நீர் நிலைகளை மீட்கும் வகையில், ஆக்கிரமிப்புகளை முழுமையாக அகற்ற திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக, பல ஆண்டுகளாக நீர் நிலைகளை ஆக்கிரமித்து வசித்து வரும், குடும்பங்கள் கணக்கெடுக்கப்பட்டு, அவர்களுக்கு குடிசை மாற்று வாரியம் சார்பில், அடுக்கு மாடி குடியிருப்புகள் கட்டும் பணி நடந்து வருகிறது.
ஒவ்வொரு வீடுகளும், தலா, 400 சதுர அடி பரப்பளவில், ஒரு படுக்கை அறை, சமையல் அறை, ஹால், பால்கனி, குளியல் அறை, கழிப்பறை, சிட் -அவுட் ஆகியவற்றுடன் கட்டப்பட்டு வருகிறது.திருப்பூர், வீரபாண்டி, பழவஞ்சிபாளையத்தில், 96.11 கோடி ரூபாய் மதிப்பில், 1,280 வீடுகள் கொண்ட அடுக்கு மாடி குடியிருப்புகள் கட்டும் பணி நடந்து வருகிறது.இங்கு, 40 பிளாக்கு, ரோடு வசதி, மழை நீர் வடிகால், மேல் நிலை குடிநீர் தொட்டி, நல்ல தண்ணீர் வசதி ஆகிய வசதிகள் செய்யப்பட்டுள்ளது. இதில், பெரும்பாலான பணிகள் முடிந்து, இறுதி கட்ட பணிகள் நடந்து வருகிறது. விரைவில் பயனாளிகளுக்கு ஒப்படைக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும், நெருப்பெரிச்சல், ஜெய் நகர் பகுதியில், 20 கோடி ரூபாய் மதிப்பில், 256 வீடுகள் கட்டும் பணியும், பாரதி நகரில், 22 கோடி ரூபாய் மதிப்பில், 288 வீடுகள் கட்டும் பணியும் நடந்து வருகிறது. இவ்விரு பணிகளையும், இரண்டு மாதத்தில் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.அதேபோல், திருக்குமரன் நகர் பகுதியில், 50 கோடி ரூபாய் மதிப்பில், 960 வீடுகளை கொண்ட, அடுக்கு மாடி குடியிருப்புகள் கட்டும் பணி துவங்கியுள்ளது. ஆறு மாதத்தில் இப்பணிகளை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
குடிசை மாற்று வாரிய அதிகாரிகள் கூறியதாவது :நீர் வழித்தடங்களை ஆக்கிரமித்து, வீடுகள் கட்டி ஆபத்தான முறையில் வசிப்பவர்களுக்கு, மாற்று குடியிருப்பு வசதிக்காக, அடுக்கு மாடி குடியிருப்புகள் கட்டப்பட்டு வருகிறது. இதற்காக, பயனாளிகள் தேர்வு செய்து, டோக்கன் வழங்கப்பட்டுள்ளன. வீரபாண்டி, பழவஞ்சிபாளையம் அடுக்குமாடி குடியிருப்பு திட்ட பணி விரைவில் முடியும்.
மாற்றுத்திறனாளி மற்றும் 65 வயதுக்கு மேற்பட்டோருக்கு, தரை தளத்தில் வீடுகள் ஒதுக்கப்படும். மற்றவருக்கு குலுக்கல் நடத்தி, வீடுகள் ஒதுக்கீடு செய்யப்படும். பாரதி நகர், ஜெய் நகர் குடியிருப்புகள் இரண்டு மற்றும் திருக்குமரன் நகர் அடுக்குமாடி குடியிருப்பு பணி ஆறு மாதத்திலும் நிறைவு பெறும். இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்,.

மூலக்கதை