எஸ்டேட்டில் மரம் வெட்ட போலி ஆவணம் விசாரணை தீவிரம்!மாவட்ட குழு வழங்கிய அனுமதியால் சந்தேகம்?

தினமலர்  தினமலர்

பந்தலுார்:'பந்தலுார் அருகே சேரம்பாடியில் உள்ள தனியார் எஸ்டேட் நிர்வாகம், மரங்களை வெட்ட அனுமதி கோரிய கடிதத்தில், போலி ஆவணத்தை சமர்ப்பித்துள்ளது,' என, புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது.
பந்தலுார் அருகே சேரம்பாடி தனியார் எஸ்டேட் நிர்வாகம் கடந்த, 2017ம் ஆண்டு ஜூன் மாதம் தனது கட்டுப்பாட்டில் உள்ள தோட்டத்தில், 12 'சர்வே' எண்களுக்கு உட்பட்ட பகுதியில், 963 அயனி பலா மரங்களை வெட்ட மாவட்ட கமிட்டியிடம் அனுமதி கோரியது.
தொடர்ந்து, பந்தலுார் தாசில்தார்; வேளாண்மை பொறியியல் துறை செயற்பொறியாளர்; கூடலுார் வன அலுவலர் ஆகியோர் ஆய்வு செய்து, மரங்களை வெட்ட பரிந்துரை செய்தனர். அதே ஆண்டு, செப்., 26ல் நடந்த மாவட்ட குழு கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் ஆவணங்களை ஆய்வு செய்து, மரங்கள் வெட்ட அனுமதியளித்தார். டிச., 13ல் அதற்கான அனுமதி கடிதம் வழங்கப்பட்டு, பட்டியல் வகையில் உள்ள அயனி பலா மரங்கள் வெட்டும் பணி துவக்கப்பட்டது.
இந்த பகுதி, யானைகள் வழித்தடமாக உள்ளதால், வன உயிரின ஆர்வலர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், ஒரே நேரத்தில், பல கோடி ரூபாய் மதிப்புடைய மரங்களை வெட்டி அகற்ற அனுமதி அளித்தது பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியது. அது குறித்து விரிவான தகவல்களுடன் கடந்த டிச., 6ல் 'தினமலர்' நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டது. தொடர்ந்து மரங்கள் வெட்ட வழங்கப்பட்ட அனுமதி ரத்து செய்யப்பட்டு, 100க்கும் மேற்பட்ட மரங்கள் வெட்டிய நிலையில் பணி நிறுத்தப்பட்டது.போலியான ஆவணங்கள்இந்நிலையில், 'மரங்கள் வெட்ட வழங்கப்பட்ட அனுமதி கடிதத்துடன் இணைக்கப்பட்ட ஆவணங்கள் போலியானது,' என்ற புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக, சேரம்பாடி வனச்சரகர்(பொ) மனோகரன் சேரம்பாடி போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்துள்ளார்.அந்த புகார் மனுவில், 'கடந்த, 2017ல் மே, 21ம் தேதிக்கு முன்னர், பந்தலுார் வட்டம் சேரங்கோடு கிராமத்திற்கு உட்பட்ட, 12 புல எண்களில் அயனி பலா மரங்களை வெட்ட அனுமதி கோரிய கடிதத்தில், கேரளா மாநிலம் சுல்தான்பத்தேரி, அம்பலவயல் பகுதியில் உள்ள ஜில்னா நர்சரி மற்றும் கார்டனிலிருந்து அயனி பலா நாற்றுக்களை, 1944ம் ஆண்டு ஜனவரி மாதம், 19ல் வாங்கி வந்து, நடவு செய்யப்பட்டுள்ளதாக, பொய்யான ஆவணங்கள் கொடுக்கப்பட்டுள்ளது,' என, தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக, இன்ஸ்பெக்டர் வெற்றிவேல்ராஜன் ஆய்வு செய்து, எஸ்டேட் சீனியர் மேனேஜர் சஞ்சய் உத்மன் என்பவரின் பெயரில், மூன்று பிரிவுகளின் கீழ், வழக்கு பதிவு செய்துள்ளார்.
உண்மை தன்மையை ஆராயணும்!
பந்தலுார் சுற்றுச்சூழல் ஆர்வலர் பாஸ்கரன் கூறுகையில்,''மரம் வெட்டும் அனுமதிக்கான ஆவணங்களின் உண்மை தன்மையை முழுமையாக ஆய்வு செய்யாமல், மாவட்ட நிர்வாகம் எவ்வாறு அனுமதி வழங்கியது. மேலும், அங்கு தற்போதுள்ள மரங்கள்; வெட்டப்பட்ட மரங்கள் குறித்து, முறையான விசாரணை மேற்கொள்ளாமல், பரிந்துரை செய்த அதிகாரிகள் மீது, துறை ரீதியான நடவடிக்கை எடுத்தால், உண்மை வெளிவரும்.'' மேலும், கூடலுார் வனக்கோட்டத்தில், மரம் வெட்டுவதற்கான அனுமதி மற்றும் வெட்டப் பட்ட மரங்களை எடுத்து செல்வதற்கான அனுமதி குறித்து தகவல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ் தகவல் கேட்டபோதும், அதனை தர மறுப்பு தெரிவிப்பது பல்வேறு சந்தேகங்களை கிளப்பி உள்ளது,'' என்றார்.

மூலக்கதை