'தாக்குதலை நிறுத்துங்கள்'; பாகிஸ்தான் ராணுவம் கெஞ்சல்

தினமலர்  தினமலர்
தாக்குதலை நிறுத்துங்கள்; பாகிஸ்தான் ராணுவம் கெஞ்சல்

ஜம்மு : எல்லையில் அத்துமீறி தாக்குதல் நடத்திய பாகிஸ்தானுக்கு, நம் ராணுவம் கொடுத்த பதிலடியை தாங்க முடியாத, பாக், ராணுவம், 'தாக்குதலை நிறுத்துங்கள்' என, கெஞ்சத் துவங்கியுள்ளது.

பதிலடி :

ஜம்மு - காஷ்மீரில், ரம்ஜான் மாதத்தில், ராணுவ நடவடிக்கைகளை நிறுத்தி வைக்க, மத்திய உள்துறை அமைச்சகம் முடிவு செய்தது. இது தொடர்பான உத்தரவு, பாதுகாப்பு படைகளுக்கு அனுப்பப்பட்டது. இருப்பினும், சமீப காலமாக, எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி நடத்திய தாக்குதலில், அப்பாவி பொதுமக்கள் நான்குக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்; ராணுவ வீரர்களும் உயிரிழந்தனர்.

இந்நிலையில் நேற்று, எல்லையில் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் ராணுவத்திற்கு, நம் ராணுவம், சரமாரியான பதிலடியை கொடுத்தது. சர்வதேச எல்லையில், நம் ராணுவம் கொடுத்த அடியை தாங்க முடியாத பாகிஸ்தான் ராணுவ வீரர்கள், பீதியடைந்துள்ளனர். 'தாக்குதலை நிறுத்துங்கள்' என, ராணுவ அதிகாரிகள் வாயிலாக, கோரிக்கை விடுத்துள்ளனர்.

நம் ராணுவ வீரர்கள் நடத்திய தாக்குதலில், பாகிஸ்தானின் நிலைகள் தகர்க்கப்பட்டு உள்ளன. பாகிஸ்தான் ராணுவத்திற்கு உயிரிழப்பும் நேரிட்டு உள்ளது. சர்வதேச எல்லையில், அத்துமீறிய பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்கும், 'வீடியோ'வை, நம் ராணுவம் வெளியிட்டு உள்ளது. அதில், பாகிஸ்தான் நிலைகள் தகர்க்கப்பட்டது உள்ளிட்ட காட்சிகள் அடங்கி உள்ளன.

தாக்குதல் :

இது குறித்து, எல்லைப் பாதுகாப்பு படை செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறியதாவது: எல்லையில், பாகிஸ்தான் ராணுவம், போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி, தொடர்ச்சியாக அத்துமீறி தாக்குதலை நடத்தியது. அதற்கு பதிலடியாகத் தான், தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது. மூன்று நாட்களாக, பாகிஸ்தான் ராணுவம் எங்கெல்லாம் அத்துமீறியதோ, அங்கெல்லாம் அவர்களுடைய நிலைகள் தகர்க்கப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.

மூலக்கதை