லண்டனில் நிரவ் மோடி: அமலாக்க துறை தகவல்

தினமலர்  தினமலர்
லண்டனில் நிரவ் மோடி: அமலாக்க துறை தகவல்

புதுடில்லி : மோசடி மன்னன் நிரவ் மோடி, தற்போது லண்டனில் தங்கி இருப்பதாக, அமலாக்கத் துறையினர் தெரிவித்து உள்ளனர்.

மஹாராஷ்டிர மாநிலம், மும்பையை சேர்ந்த வைர வியாபாரி, நிரவ் மோடி மற்றும் அவரது உறவினர் மெஹுல் சோக்சி ஆகியோர், பஞ்சாப் நேஷனல் வங்கியின், மும்பை கிளையில், 13 ஆயிரத்து 400 கோடி ரூபாய் மோசடி செய்து, வெளிநாடு தப்பிச் சென்றனர். அவர்களை தேடும் பணியில், அமலாக்கத் துறையினர் ஈடுபட்டு உள்ளனர்.

'சம்மன்' :

நிரவ் மோடி மட்டுமல்லாது, அவரது தந்தை தீபக் மோடி, சகோதரர் நிஷால் மோடி, சகோதரி பூர்வி மேத்தா மற்றும் அவரது கணவர் மாயங்க் மேத்தா ஆகியோரும், வெளிநாடு தப்பிச் சென்றனர். இவர்கள் அனைவரையும், 15 நாட்களுக்குள், மும்பை அமலாக்க துறை அலுவலகத்தில் ஆஜராகி, விசாரணைக்கு ஒத்துழைக்கும்படி, மே மாதம், முதல் வாரத்தில், இ - மெயில் மூலம், 'சம்மன்' அனுப்பப்பட்டது. இவர்கள் ஆஜராகவில்லை என்றால், அடுத்த சம்மன் அனுப்பப்படும் என அமலாக்கத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்நிலையில், சிங்கப்பூர் பாஸ்போர்ட் வைத்திருக்கும் நிரவ் மோடி, தற்போது ஐரோப்பிய நாடான, பிரிட்டனின் லண்டனில் பதுங்கி இருப்பதாகவும், அவரது சகோதரர் நிஷால் மோடி, ஐரோப்பிய நாடான பெல்ஜியத்தில் பதுங்கி இருப்பதாகவும், அமலாக்க துறையினர் தெரிவித்தனர்.

ஹாங்காங்:

நிரவ் மோடியின் சகோதரி பூர்வி மேத்தா, பெல்ஜியம் நாட்டு பாஸ்போர்ட் வைத்து உள்ளார். இவரது கணவர், மாயங்க் மேத்தா, பிரிட்டன் பாஸ் போர்ட் வைத்துள்ளார். இவர்கள் இருவரும், தற்போது, சீனாவின் கட்டுப்பாட்டில் இருக்கும் ஹாங்காங்கில் தங்கி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அதில், மாயங்க் மேத்தா மட்டும், ஹாங்காங்கில் இருந்து, அமெரிக்காவின் நியூயார்க் நகரத்துக்கு அடிக்கடி பயணிப்பதாக, அமலாக்கத் துறையினருக்கு தகவல் கிடைத்து உள்ளது.

மூலக்கதை