சான்றிதழ் தொழிற்பயிற்சி வகுப்புகளுக்கு... வரவேற்பு !பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் துவக்கம்

தினமலர்  தினமலர்

பொள்ளாச்சி:பொள்ளாச்சி நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், படிக்கும் போது, சுய தொழில் கற்க தொழிற்பயிற்சி மற்றும் அரசு தேர்வுக்கான பயிற்சி மையங்களும் விரைவில் துவங்கப்பட உள்ளது.பொள்ளாச்சி நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி பள்ளியில், ஆறாம் வகுப்பு முதல், 12ம் வகுப்பு வரை, 1,176 மாணவியர் படிக்கின்றனர்.
மாணவ, மாணவியர் வசதிக்காக, எஸ்.சி., பி.சி., அரசு விடுதிகள் உள்ளன; ஐ.எஸ்.ஓ., தரம் பெற்ற இப்பள்ளியில், படிக்கும் போது மாணவியருக்கு தொழிற்கல்வி அளிக்கும் வகையில், புதிய திட்டம் செயல்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கான முயற்சியில் பள்ளி நிர்வாகத்தினர் ஈடுபட்டுள்ளனர்.
பள்ளி நிர்வாகத்தினர் கூறியதாவது:பொள்ளாச்சி கோட்டூர் ரோடு நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், தேசிய திறனாய்வு தேர்வு, 'நீட்' உள்ளிட்ட தேர்வுகளுக்கான பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. ஒன்பதாம் வகுப்பு பயிலும் மாணவியருக்கு தொழிற் பயிற்சி அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
கல்வித்துறை அமைச்சர் துவங்கிய மத்திய அரசின் அங்கீகாரம் பெற்ற பாடத்திட்டத்துடன் இணைந்த சான்றிதழுடன் கூடிய நான்கு ஆண்டு தொழிற்கல்வி பயிற்சி துவங்கப்பட உள்ளது. அதில், ஒன்பதாம் வகுப்பில் பயிலும் மாணவியருக்கு கணினி பயிற்சியுடன் கூடிய தொழிற்கல்வி, பேஷன் டெக்னாலஜி அறிமுகப்படுத்தப்படுகிறது.பயிற்சி பெறும் மாணவியருக்கு சான்றிதழ் வழங்கப்படுகிறது. இதனை கொண்டு மாணவியர், மேல்நிலை கல்விக்கு பின், வங்கி கடன் பெற்று தொழில் துவங்க முடியும். இந்த பயிற்சி முகாம் துவங்க திட்டமிடப்பட்டுள்ளது.
ஆர்.எம்.எஸ்.ஏ., மூலம் தொழிற்கல்வி அளிக்கும் பயிற்சி, பொள்ளாச்சி நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி, கிணத்துக்கடவு, கோவை ராஜவீதி பள்ளி என மூன்று பள்ளிகளில், இத்திட்டம் துவங்கப்பட உள்ளது.இதுபோன்று, தொடுவானம் அரசு நுழைவுத்தேர்வுக்கான இலவச பயிற்சி மையம் நகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மட்டும் துவங்கப்படுகிறது.
இந்த மையத்தில் அனைத்து விதமான அரசுத்தேர்வுகளுக்கும் பயிற்சி அளிக்கப்படுகிறது. பள்ளியில் பயிலும் மாணவ, மாணவியரின் வசதிக்காக இத்திட்டம் துவங்கப்படுகிறது. இவ்வாறு, பள்ளி நிர்வாகத்தினர் கூறினர். இத்திட்டங்களுக்கு கல்வி ஆர்வலர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
மக்களிடையே விழிப்புணர்வு
பொள்ளாச்சி நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாணவியர் சேர்க்கை நடைபெற்று வருகின்றன. மாணவியர் சேர்க்கை அதிகரிக்க, பள்ளியின் தேர்ச்சி சதவீதம், தேசிய திறனாய்வு தேர்வு, 'நீட்' தேர்வு பயிற்சி, ஸ்மார்ட் கிளாஸ் மற்றும் டிஜிட்டல் போர்டு வகுப்பறை; யோகா, கராத்தே, தையல், இலவச பயிற்சிகள் குறித்தும்; அரசின், மடிக்கணினி, சைக்கிள் உள்ளிட்ட, 14 வித பொருட்கள் வழங்குதல் உள்ளிட்ட விபரங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களை வினியோகித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துகின்றனர். மேலும், பள்ளியில் சேர்ப்பதால் மாணவியருக்கு கிடைக்கும் சலுகைகள் குறித்தும் விளக்கி வருகின்றனர்.

மூலக்கதை