பழங்குடியினருக்கு ஜாதிசான்று வழங்காமல் அலைக்கழிப்பு ! அதிகாரிகள் அலட்சியம் செய்வதாக புகார்

தினமலர்  தினமலர்

பந்தலுார்:ஜாதி சான்றிதழ் வழங்க மறுத்து வரும் அதிகாரிகளால் பழங்குடியின மாணவர்கள் பள்ளி, கல்லுாரிகளில் சேர முடியாமல் பாதிக்கப்பட்டுள்ளனர்.
நீலகிரி மாவட்டத்தில் தோடர், கோத்தர், இருளர், குரும்பர், பனியர், காட்டுநாயக்கர் ஆகிய பழங்குடியின மக்கள் வாழ்ந்து வருகின்றனர். மாவட்டத்தில் உள்ள மொத்த மக்கள் தொகையில், 35 ஆயிரம் பேர் வாழ்ந்து வருவதாக கணக்கெடுப்பில் கூறப்படுகிறது.
பழங்குடியின மக்களுக்கான ஜாதி சான்றிதழ், பிற சமுதாய மக்கள் பெறுவது போல் பெற இயலாது. மாறாக, கிராம நிர்வாக அலுவலருக்கு விண்ணப்பித்தவுடன், ஆர்.டி.ஓ. தலைமையிலான வருவாய்த்துறை அதிகாரிகள் குழுவினர், நேரடி ஆய்வு செய்து விண்ணப்பதாரர் பழங்குடியினர்தான் என்றும், அவர் சார்ந்துள்ள ஜாதியின் உண்மை நிலையை கூறி, ஜாதி சான்றிதழ் வழங்க பரிந்துரைப்பதுடன், ஆர்.டி.ஓ.,வே நேரடியாக ஜாதி சான்றிதழை வழங்க வேண்டும்.இதில், பெரும்பாலான பண்டைய பழங்குடியினர்களுக்கு ஜாதி சான்றிதழ் இல்லாத நிலையில், அவர்களின் வாரிசுகளுக்கு ஜாதி சான்றிதழ் வழங்க சம்பந்தப்பட்ட பழங்குடியின வகுப்பை சார்ந்த கிராமத்தலைவரிடம் சான்று பெற்று வழங்கினால், அவர்களுக்குரிய ஜாதி சான்றிதழ் ஆய்வுக்கு பின்னர் வழங்கப்பட்டு வந்தது. ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளாக பழங்குடியினர்களுக்கான ஜாதி சான்றிதழ் வழங்குவதில் வருவாய்த்துறை அதிகாரிகள் மெத்தனம் காட்டி வருகின்றனர்.இதனால் பள்ளி, கல்லுாரிகளில் சேரும் மாணவர்கள், உயர் கல்வியின்போது ஜாதி சான்று இணைக்காத நிலையில், உயர்படிப்பு படிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. கல்வி உதவித்தொகையும் பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
பனியர் சமுதாயத்தை சேர்ந்த ஒரு மாணவன் பிளஸ்2வில் தேர்ச்சி பெற்றுள்ளார். இவர், ஜாதி சான்று இணைக்க முடியாததால் கல்லுாரியில் சேர முடியாத நிலையில் உள்ளார். ஊட்டியில் பழங்குடியினர்களுக்காக செயல்படும் 'ஏகலைவா' பள்ளியில் மாணவர்களை சேர்க்கவும் ஜாதி சான்றிதழ் இல்லாமல் அவதியடைந்து வருகின்றனர். எனவே மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் கூடலுார் ஆர்.டி.ஓ. மீது முதல்வரிடம் நேரில் புகார் மனு கொடுக்க பழங்குடியினர் முடிவு செய்துள்ளனர்.
நீலகிரி மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா கூறுகையில், ''ஜாதி சான்றிதழ்கள் உடனடியாக ஆய்வு செய்து வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.'' என்றார்.
150க்கு 7 பேருக்கு மட்டும் சான்று
பந்தலுார் அருகே எருமாடு, கையுன்னி, அய்யன்கொல்லி, ஓர்கடவு, குன்றில்கடவு உள்ளிட்ட பல்வேறு பழங்குடியின கிராமங்களிலும் கடந்த 2017 ல் நவம்பர் மாதம் 16ல் கையுன்னியில் நடந்த மனு நீதி நாள் கூட்டத்தில், அப்போதைய மாவட்ட வருவாய் அலுவலரிடம் 150க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஜாதி சான்றிதழ் கோரி விண்ணப்பித்தனர். அதில் வெறும் 7 பேருக்கு மட்டுமே சான்று வழங்கப்பட்டது. மற்றவர்கள் தொடர்ச்சியாக பத்து முறை விண்ணப்பித்தும் இதுவரை ஜாதி சான்று வழங்கிட கூடலுார் ஆர்.டி.ஓ. முன்வரவில்லை என்று பழங்குடியினர் புகார் கூறுகின்னர்.

மூலக்கதை