கோவையில் ஆண்டுதோறும் நாய்க்கடி! அதிகரிப்பு ஆறு ஆண்டுகளில் 40 பேர் உயிரிழப்பு

தினமலர்  தினமலர்
கோவையில் ஆண்டுதோறும் நாய்க்கடி! அதிகரிப்பு ஆறு ஆண்டுகளில் 40 பேர் உயிரிழப்பு

கோவை:கடந்த ஆறு ஆண்டுகளில் வெறிநாய் கடிக்காக, கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட, 40 பேர் உயிரிழந்த நிலையில், நாய்க்கடியால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை, தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சாதாரண நாட்களில் நடந்து செல்லும் இடங்களுக்கு, தெருக்களில் சுற்றித்திரியும் நாய்களுக்கு பயந்து, ஆட்டோ பிடித்து செல்லுமளவுக்கு, நாய்க்கடி பீதி மக்களை பாடாய்படுத்துகிறது.
கோவை மாவட்டத்தில் கடந்த ஆண்டுகளில், இல்லாத அளவுக்கு தெருநாய்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால், நாய்க்கடியால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும், அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கோவை அரசு மருத்துவமனையில் நாய்க்கடி சிகிச்சைக்கான சிகிச்சை பிரிவில், தடுப்பூசி போடப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது.இந்நிலையில், 2012 முதல், 2017ம் ஆண்டு வரையிலான, ஆறு ஆண்டுகளில் வெறிநாய் கடிக்காக அனுமதிக்கப்பட்ட, 40 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். ஐந்தாண்டுகளில், 78 ஆயிரத்து 785 ஆண்கள், 1.30 லட்சம் பெண்கள் என, 2.09 லட்சம் பேர் நாய்கடிக்காக சிகிச்சை பெற்றுச் சென்றுள்ளனர். இதையடுத்து, கோவை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் பெருகி வரும் தெருநாய்களை கட்டுப்படுத்த, நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.சமூக ஆர்வலர்கள் கூறுகையில்,'தெருநாய்களை கொல்லக்கூடாது என, மத்திய பிராணி வதை தடுப்புச்சட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், அவற்றுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது. அதன் பின் நாய்களை ஒரு வார காலம் பராமரித்து, அவை எங்கு பிடிக்கப்பட்டதோ அங்கேயே கொண்டு சென்று விட வேண்டும் எனவும் சட்டத்தில் உள்ளது.கோவையில் பிடிபடும் நாய்களுக்கு கருத்தடை செய்து பராமரிக்க, சீரநாயக்கன்பாளையம் மற்றும் உக்கடம் ஆகிய இரு இடங்களில் மையங்கள் செயல்பட்டு வந்தது. கடந்த சில மாதங்களாக இம்மையங்கள் செயல்படுவதில்லை. இதன் காரணமாக, மாநகர பகுதிகளில் நாய்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதை உடனடியாக தடுக்காவிட்டால் ஆபத்து' என்றனர்.கோவை அரசு மருத்துவமனை டீன் அசோகன் கூறுகையில், ''ராபிஸ் நோய் தாக்கினால், உயிரிழப்பு நிச்சயம். தடுப்பூசி மட்டுமே இதற்கு தீர்வு. வெறிநாய் கடித்த இடத்தில், சோப்பு போட்டு கழுவ வேண்டும். கிருமிநாசினி அல்லது 'ஸ்பிரிட்' கொண்டு காயத்தை துடைக்க வேண்டும். காயம் ஏற்பட்ட இடத்தில் கட்டுப்போட கூடாது. வெறி நாய்க்கடிக்கு ஆளாகும் நோயாளிகளுக்கு, தண்ணீரைக் கண்டால் வலிப்பு, உடல் நடுக்கம் ஏற்படும். எந்த நாய் கடித்தாலும், உடனடியாக மருத்துவமனைக்கு வந்து டாக்டரிடம், உரிய சிகிச்சை பெறுவது அவசியம்,'' என்றார்.

மூலக்கதை