பாலம் கட்டியும் பயணிகள் பாடு தீரவில்லை இதுவும் ஒரு பயனற்ற வேலை!இணைப்புச்சாலை இல்லாமல் பெரும் தொல்லை

தினமலர்  தினமலர்

கோவை:வாகனங்கள் காத்திருப்பதை தவிர்க்க, நெரிசலைக் குறைக்க அங்கே பாலம் கட்டக் கோரினர். பத்தாண்டு போராட்டத்துக்கு பின், ஒரு வழியாக அங்கு பாலம் கட்டப்பட்டது. ஆனால், அவதி மட்டும் அப்படியே தொடர்கிறது. காரணம், பாலத்திற்கான இணைப்புச் சாலை அமைக்கப்படவில்லை.
சிங்காநல்லுாரிலிருந்து வெள்ளலுார் செல்லும் வழியில், ரயில்வே கடவு ஒன்றுள்ளது. அதை தினசரி கடந்து செல்ல, வாகனங்கள் அதிக நேரம் காத்திருக்க வேண்டியிருந்தது. இப்படி நேரம் விரயமாவதை தவிர்க்கவும், அதனால் ஏற்படும் நெரிசலைக் குறைக்கவும் கடந்த 2007ல் பாலம் கட்டுவதாக அரசு அறிவித்தது.
அதில், பாலத்தின் இணைப்புச் சாலை திருச்சி சாலையில் உள்ள, தற்போதைய உழவர் சந்தை முன் துவங்கி ரயில்வே கடவு வழியாக தற்போது கட்டப்பட்டுள்ள மேம்பாலம் முடியும் இடத்தில் முடிக்கத் திட்டமிடப்பட்டிருந்தது.ஆனால், பின்னர் வந்த அரசு, அத்திட்டத்தை மாற்றி, 876 மீட்டர் நீளம், 8.5 மீட்டர் அகலத்தில், 25.8 கோடி ரூபாய் செலவில் பாலத்தை கட்டியது. இப்பாலம் கடந்த 2017 மார்ச் 18ல் கட்டி முடிக்கப்பட்டு, மக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டது.
ஆனால், பாலம் கட்டப்பட்டதன் நோக்கம் இதுவரை நிறைவேறவில்லை. மாறாக முன்பை விடவும் தற்போது சிங்காநல்லுார் இ-3 காவல் நிலையம் அருகில், திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்துள்ளது. வாகன வரிசை பாலம் வரையில் நீள்கிறது. இதனால் அடிக்கடி விபத்துகளும் ஏற்படுகின்றன.
பத்தாண்டுகளாக அரசுக்கு தொடர்ந்து 'ஓலை' அனுப்பி காத்திருந்ததற்கு பின்னர் சிங்காநல்லுார் - வெள்ளலுார் சாலையில் கட்டப்பட்ட ரயில்வே மேம்பாலத்தால் எதிர்பார்த்த பலன் இல்லை. பல நேரங்களில் பாலத்தில் துவங்கி சிங்காநல்லுார் சிக்கல் வரையில், 1.5 கி.மீ., வரையில், வாகனங்கள் வரிசை கட்டி நிற்கின்றன. அப்பகுதியை கடப்பதற்கு மட்டும் அரை மணி நேரத்திற்கும் மேல் ஆவதாக வாகன ஓட்டிகள் வருத்தப்படுகின்றனர்.
இ.கம்யூ., மாவட்டச் செயலாளர் சுந்தரம் கூறுகையில், ''போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க, சிங்காநல்லுார் உழவர் சந்தை முதல், வெள்ளலுார் பாலம் முடியும் இடம் வரை இணைப்புச்சாலை அமைக்க வேண்டும். போதுமான இடம் உள்ளதால் அரசு விரைந்து சாலை அமைக்கும் பணியை விரைந்து துவக்க வேண்டும். உரிய தீர்வு காணப்படாவிட்டால் சிங்காநல்லுார், கள்ளிமடை, வெள்ளலுார் உள்ளிட்ட பகுதி மக்களைத் திரட்டி போராடுவதைத் தவிர வேறு வழியில்லை,'' என்றார்.

மூலக்கதை