போக்குவரத்து ஒழுங்குபடுத்தும் போலீசார் பணியில் சுணக்கம்! நெரிசலில் சிக்கித்தவிக்கும் வாகன ஓட்டிகள்

தினமலர்  தினமலர்

திருப்பூர்:திருப்பூரில், போக்குவரத்து போலீசார், பணியில் போதிய கவனம் காட்டாததால், வாகன ஓட்டிகள் நெரிசலில் சிக்கி தவிக்கின்றனர். திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் கட்டுப்பாட்டின் கீழ், வடக்கு, தெற்கு மற்றும் போக்குவரத்து உதவி கமிஷனர் அலுவலகங்கள், ஏழு போலீஸ் ஸ்டேஷன்கள், தலா இரு மகளிர் மற்றும் போக்குவரத்து போலீஸ் ஸ்டேஷன்கள், எட்டு செக் போஸ்ட்கள், இரு பஸ் ஸ்டாண்டுகளில், போலீஸ் 'அவுட்-போஸ்ட்'கள் உள்ளன.நகரின் முக்கிய பிரச்னையாக, போக்குவரத்து பிரச்னை உருவெடுத்துள்ளது. பாலம் கட்டுமான பணியால், திரும்பிய பக்கமெல்லாம், வாகன நெரிசல் ஏற்படுகிறது. இதை தவிர்க்க, முக்கிய ரோடுகளான அவிநாசி ரோடு, பல்லடம் ரோடு, காங்கயம் ரோடு, தாராபுரம் ரோடு, பி.என்., ரோடுகளில், போக்குவரத்து சிக்னல்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இதுதவிர, முக்கிய சந்திப்புகளில், போக்குவரத்து போலீசாரும், கூட்ட நெரிசல் அதிகமுள்ள நேரங்களில், டிராபிக் வார்டன், ஊர்க்காவல் படையினரும் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபடுகின்றனர். மேலும், உள்ளூர் போலீசார், நகரப்பகுதியில் ரோந்து மற்றும் 'பீட்' போட்டு கண்காணிப்புப் பணியில் ஈடுபடுவது வழக்கம்.
கமிஷனர் நாகராஜன் பொறுப்பேற்ற பின், போக்குவரத்து பிரச்னையில் நேரடியாக கவனம் செலுத்தி, போக்குவரத்து நெரிசலை தவிர்க்க, பல இடங்களில் போலீசாரை பணியமர்த்தினார்.கடந்த சில நாட்களாக, நகரின் முக்கிய பகுதிகளில் போலீசார் இல்லாததால், அரிசிக் கடை வீதி, அவிநாசி ரோடு, நடராஜ் தியேட்டர் ரோடு, ஏ.பி.டி., ரோடு, பி.என்., ரோடு என, பல பிரதான ரோடுகளில், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. போலீசார் இல்லாததால், ஒரு வழிப்பாதையில் வருவது, சிக்னல்களில் நிற்காமல் செல்வது என, சாலை வீதிமீறல்களில் வாகன ஓட்டிகள் ஈடுபடுகின்றனர்.
வெயிலில், நீண்ட நேரம் காத்திருந்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. சமீபத்தில், அரிசிக்கடை வீதியில், போக்குவரத்து நெரிசலால் ஆம்புலன்ஸ் ஒன்று, சிக்கிக் கொண்டது. அங்கு, போலீசார் பணியில் இல்லாததால், மக்களே போக்குவரத்து நெரிசலை சரி செய்து, ஆம்புலன்ஸ்சை அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து, போலீசார் கூறுகையில், 'கமிஷனர் விடுப்பில் சென்று விட்டதால், வேலை வாங்க வேண்டிய உயரதிகாரிகள் அலுவலகத்தில் முடங்கி கிடக்கின்றனர். அதனால், போக்குவரத்து உட்பட பல்வேறு பணிகளில் ஈடுபடும் போலீசாரும், பணிக்கு செல்வதாக கூறி, சொந்த வேலைகளை பார்க்க சென்று விடுகின்றனர். இதுதான், போக்குவரத்து நெரிசலுக்கு காரணம்,' என்றனர்.

மூலக்கதை