விஸ்வரூபம் எடுக்கிறது பூவா, தலையா விவகாரம் : ஐசிசி முடிவுக்கு வீரர்கள் எதிர்ப்பு

தமிழ் முரசு  தமிழ் முரசு
விஸ்வரூபம் எடுக்கிறது பூவா, தலையா விவகாரம் : ஐசிசி முடிவுக்கு வீரர்கள் எதிர்ப்பு

மும்பை: டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் டாஸ் போடும் முறையை விரைவில் நீக்க ஐசிசி திட்டமிட்டு வருவதாகத் தகவல் வெளியாகியுள்ள நிலையில் ஐசிசியின் இந்த முயற்சிக்கு வீரர்கள்  கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். கடந்த 1877ம் ஆண்டு இங்கிலாந்து-ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே முதல் சர்வதேச டெஸ்ட் போட்டி அறிமுகப்படுத்தப்பட்டது.

அன்றைய தினத்திலிருந்து, டாஸ் போடும் வழக்கம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. உள்ளூர் அணியின் கேப்டன், நாணயத்தை சுண்டி விட, எதிரணி வீரர் ஹெட் அல்லது டெய்ல் கேட்பார்.

அதில் வெற்றி பெறுபவர் பேட்டிங்கா, பீல்டிங்கா என்பதை தேர்வு செய்வார்கள்.

உள்ளூரில் நடக்கும் போட்டிகளில் தங்கள் அணிக்கு சாதகமாக ஆடுகளத்தை அமைத்துக் கொள்கிறார்கள்.

மேலும், சொந்த மண்ணில் விளையாடும் அணிக்கு நிறைய சாதகமான அம்சங்கள் இருப்பதால், பொதுவாக எதிரணிகளே திணறுகின்றன. இதனால், டாஸ் போடும் முறைக்கு முடிவு கட்டி, எதிரணியே பேட் செய்வதா, பந்து வீசுவதா என்பதை நேரடியாக தேர்ந்தெடுக்கும் முறையை கொண்டு வர ஐசிசி பரிசீலித்து வருகிறது.

இதுதொடர்பாக சமீபத்தில் மும்பையில் நடந்த ஐசிசி கூட்டத்திலும் விவாதிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இந்த புதிய நடைமுறையை அமல்படுத்த ஐசிசி தீவிரமாக முயற்சி செய்து வருவதற்கு வீரர்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.

குறிப்பாக ஐசிசி, இதில் தீவிரமாகச் செயல்பட்டு வந்தாலும் லேமன், ரிக்கி பாண்டிங், மைக்கேல் ஹோல்டிங், இயான் போத்தம், ஷேன் வார்னே, ஸ்டீவ் வாக் போன்ற சில முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இது குறித்து ரிக்கி பாண்டிங்  கூறுகையில் அணியில் விளையாடும் பல்வேறு வீரர்கள் இந்த முடிவில் விருப்பமில்லை எனவும் இதனை தடுக்க வேண்டும் எனவும் தன்னிடம் தெரிவித்ததாக கூறியுள்ளார்.

.

மூலக்கதை