மகாதீர் வெற்றிக்கு உதவிய மலேசிய முன்னாள் துணைப் பிரதமர் அன்வர் விடுதலை!

விகடன்  விகடன்
மகாதீர் வெற்றிக்கு உதவிய மலேசிய முன்னாள் துணைப் பிரதமர் அன்வர் விடுதலை!

லேசிய மன்னர் உத்தரவையடுத்து ஒரே பாலின சேர்க்கை குற்றச்சாட்டு காரணமாகச் சிறையில் அடைக்கப்பட்ட மலேசிய முன்னாள் துணைப் பிரதமர் அன்வர் இப்ராஹிம் விடுதலை செய்யப்பட்டுள்ளார். 

மலேசிய துணைப் பிரதமர் அன்வர் இப்ராஹிமுக்கு 2015-ம் ஆண்டு ஒரேபாலின சேர்க்கை குற்றச்சாட்டு காரணமாக 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. கடந்த 5 மாத காலமாகக் கோலாலம்பூரில் உள்ள மருத்துவமனையில் தோள்பட்டை அறுவைசிகிச்சைக்காக அவர் அனுமதிக்கப்பட்டிருந்தார். சமீபத்தில் நடந்து முடிந்த தேர்தலில் மலேசிய முன்னாள் பிரதமர் மகாதீரின் நம்பிக்கை கூட்டணியுடன் இணைந்து அன்வரின் மக்கள் நீதிக் கட்சி போட்டியிட்டு 48 தொகுதிகளைக் கைப்பற்றியது. 

தற்போது, மலேசியாவில் நம்பிக்கை கூட்டணி ஆட்சி அமைத்துள்ளது. பிரதமராக 92 வயது மகாதீர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். தன்னால் இன்னும் 2 ஆண்டுகள் வரைதான் பிரதமர் பதவியில் இருக்க முடியும் என்று மகாதீர் கூறியுள்ளார். இந்நிலையில், சிறையில் உள்ள அன்வர் இப்ராஹிமை விடுவிக்க மலேசிய மன்னர் ஐந்தாவது சுல்தான் முகமதுவுடன் மகாதீர் கலந்தாலோசித்து வந்தார். மன்னர் நினைத்தால் அன்வர் இப்ராஹிமுக்கு விடுதலை அளிக்க முடியும். தன் முழு பொறுப்பில் அன்வரை விடுவிப்பதாக மன்னர் அறிவித்ததையடுத்து, அன்வர் விடுதலை செய்யப்பட்டுள்ளார். 

தோல்வியடைந்த மலேசிய பிரதமர் நஜீப் ரஸாக்கின் அரசியல் தூண்டுதல் காரணமாக அன்வர் இப்ராஹிம் மீது தன்பாலின குற்றச்சாட்டு சுமத்தப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. மலேசியாவில் இந்தக் குற்றத்துக்கு 5 முதல் 20 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்க சட்டத்தில் இடமுள்ளது. தண்டனை காலம் முடிந்த பின்னரும் அடுத்த 5 ஆண்டுக்காலம் தேர்தலில் போட்டியிட முடியாது. அரசியல் எதிரிகளை ஒழிக்க தன்பாலின குற்றச்சாட்டு புகார்களை அதிகாரத்தில் இருப்பவர்கள் கையில் எடுப்பதாகவும் பரவலான குற்றச்சாட்டு அங்கு உள்ளது. தற்போது, மன்னரே அன்வரை விடுதலை செய்திருப்பதால், இனிமேல் அன்வர் இப்ராஹிம் தேர்தலில் போட்டியிட முடியும். மகாதீர், பிரதமர் பதவியிலிருந்து விலகும்பட்சத்தில் மலேசிய பிரதமராவும் அன்வருக்கு வாய்ப்புள்ளது. 
 

மூலக்கதை