`13 அரசுப் பள்ளிகளில் 100% தேர்ச்சி!’ - பிளஸ் டூ தேர்வில் 4-ம் இடம் பிடித்த ராமநாதபுரம்

விகடன்  விகடன்
`13 அரசுப் பள்ளிகளில் 100% தேர்ச்சி!’  பிளஸ் டூ தேர்வில் 4ம் இடம் பிடித்த ராமநாதபுரம்

பிளஸ் டூ தேர்வில் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 67 அரசுப் பள்ளிகளில் 13 பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் 100 சதவிகிதத் தேர்ச்சி பெற்றுள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் ஒட்டு மொத்த தேர்ச்சி விகிதத்தில் 4- ம் இடம் பிடித்தது.

தமிழகம் முழுவதும் பிளஸ் டூ பொதுத்தேர்வு கடந்த மார்ச் முதல் தேதி முதல் ஏப்ரல் 13 ம் தேதி வரை நடைபெற்றது. ராமநாதபுரம் மாவட்டத்தில் 54 தேர்வு மையங்களில் 134 பள்ளிகளைச் சேர்ந்த 15,155 மாணவ, மாணவியர் அந்தத் தேர்வை எழுதினர். இவர்களில் 7,030 மாணவர்கள், 8,125 மாணவியர் ஆவர். இதில் மாணவர்களில் 6,630 பேரும், மாணவியர்களில் 7,901 பேரும் என மொத்தம் 14,531 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். ஒட்டுமொத்த தேர்ச்சியில் மொத்தம் 95.88 சதவிகிதம் பெற்று ராமநாதபுரம் மாவட்டம் மாநில அளவில் 4வது இடத்தைப் பிடித்துள்ளது.

பரமக்குடி கல்வி மாவட்டத்தில் 10 அரசு மேல்நிலைப் பள்ளிகள், 4 அரசு உதவி பெறும் பள்ளிகள், 8 மெட்ரிக்குலேசன் மேல்நிலைப் பள்ளிகள் என 22 பள்ளிகளும், ராமநாதபுரம் கல்வி மாவட்டத்தில் 3 அரசு மேல்நிலைப் பள்ளிகளும்,19 மெட்ரிக் மேல்நிலைப் பள்ளிகள் உட்பட 22 பள்ளிகளும் சேர்த்து மொத்தம் 44 பள்ளிகள் 100 சதவிகிதம் தேர்ச்சி பெற்றுள்ளன. இதில் மாவட்டத்தில் உள்ள 67 அரசு மேல்நிலைப் பள்ளிகளில் 13 பள்ளிகள் முழு அளவு தேர்ச்சி கண்டு அசத்தியுள்ளனர். குறிப்பாக கன்னிராஜபுரம் அரசுப் பள்ளியில் 212 பேரும், பேரையூர் அரசுப் பள்ளியில் 106 பேரும், கடுக்காய்வலசை அரசுப் பள்ளியில் 91 பேரும் என அதிக எண்ணிக்கையினை கொண்ட மாணவ மாணவிகள் 100 சதவிகிதம் தேர்ச்சியடைந்து சாதனை படைத்துள்ளனர். பிளஸ் டூ அரசுப் பொதுத் தேர்வில் கணிதத்தில் 24 பேர்,வணிகவியல் 26 பேர், கணக்குப் பதிவியல் 36 பேர் தவிர, தாவரவியல், வரலாறு, கணினி அறிவியல் ஆகிய பாடங்களில் தலா ஒருவர் வீதம் பாடவாரியாக 100 சதவிகித மதிப்பெண் பெற்று தேர்ச்சியடைந்துள்ளனர்.
 
 

மூலக்கதை