`கொஞ்சம் பொறுங்க; 23-ம் தேதிக்குப் பிறகு இனிப்புதான்!’ - பிறந்தநாள் விழாவில் ஜெய்ஆனந்த் சூசகம்

விகடன்  விகடன்
`கொஞ்சம் பொறுங்க; 23ம் தேதிக்குப் பிறகு இனிப்புதான்!’  பிறந்தநாள் விழாவில் ஜெய்ஆனந்த் சூசகம்

திவாகரனுக்கும் தினகரனுக்கும் இடையே வெடித்த கடுமையான மோதலுக்குப் பிறகு ஒரு  இக்கட்டான சூழ்நிலையில் திவாகரன் மகன் ஜெய்ஆனந்த் தனது 25 வது பிறந்த நாளை இன்று விமர்சையாகக் கொண்டாடினார். அப்போது, `23ம் தேதி வரை அமைதியாக இருங்க அதற்கு பிறகு இனிப்போடு சேர்ந்த அதிர்வேட்டுதான் நமக்கெல்லாம்' என குஷி மோடில் கூறியிருக்கிறார்.

தினகரனுடன் மோதல் ஏற்பட்டதை தொடர்ந்து திவாகரன் அம்மா அணி என்கிற பெயரில் தனியாகச் செயல்பட்டு வருகிறார். இதற்கான அலுவலகத்தை இரண்டு வாரங்களுக்கு முன்பு மன்னார்குடியில் திறந்தார் திவாகரன். மேலும், தொடர்ச்சியாக தினகரனை விமர்சித்துப் பேசியும் வந்தார். இந்த நிலையில் தினகரன் சிறையில் சசிகலாவைச் சந்தித்து இதுகுறித்துப் பேசினார். இதனைத் தொடர்ந்து சசிகலாவின் வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன், இனிமேல் சசிகலாவின் பெயரையோ, படத்தையோ பயன்படுத்தக் கூடாது என்றும், அவரை உடன் பிறந்த சகோதரி என்றும் அழைக்கக் கூடாது என திவாகரனுக்கு நோட்டீஸ் ஒன்றை அனுப்பினார். 

அதன் பிறகு கடந்த திங்கள்கிழமை மன்னார்குடியில் தன் ஆதரவாளர்களைச் சந்தித்த திவாகரன், `இனி நான் சசிகலாவை சகோதரி என அழைக்க மாட்டேன்/ அவர் என்னைக் குடும்பத்தை விட்டு நீக்கியதற்கு நன்றி’ என மீடியா முன்பு பேசினார். இந்தப் பரபரப்பான சூழ்நிலையில் ஜெய்ஆனந்த் இன்று (16.5.18) தனது 25வது பிறந்த நாளை சுந்தரக் கோட்டையில் உள்ள பண்ணை வீட்டில் தனது ஆதரவாளர்களுடன் விமர்சையாகக் கொண்டாடினார். அப்போது குஷி மோடில் இருந்தவர், `இப்பதான் நமக்கு டைம் நல்லா இருக்கு’ எனக் கூறி அனைவரையும் குஷிப்படுத்தியிருக்கிறார். 

இது குறித்து விவரம் அறிந்தவர்களிடம் பேசினோம். ``பிறந்த நாளை பிரமாண்டமாகக் கொண்டாட வேண்டும் எனச் சிலர் அவரிடம் போன வாரமே சொன்னார்கள். அதற்கு, `இப்ப இருக்கிற சூழ்நிலையில் பிறந்தநாள் கொண்டாட்டம் வேண்டாம்’ என்றிருக்கிறார். மேலும், யாரும் என்னை வாழ்த்தி பில்டப் கொடுத்து வாசகங்கள் எழுதி பிளக்ஸ் வைத்து, போஸ்டர் ஒட்டினால், அவை ஏதேனும் புதிய சிக்கலை ஏற்படுத்தும் என்பதற்காக அதற்குத் தடை போட்டார். அதன்படி அனைவரும் அமைதியாக இருந்தோம்.

ஆனாலும் பிறந்த நாளான இன்று காலையிலேயே கிளம்பிய ஜெய்ஆனந்த் தஞ்சாவூர் புன்னைநல்லூர் மாரியம்மன் கோயிலுக்குச் சென்று சாமி தரிசனம் செய்தார். பின்னர் சுந்தரக்கோட்டை வந்த ஜெய்ஆனந்துக்கு ஏராளமானவர்கள் வாழ்த்துத் தெரிவித்தனர். ஆளுயுர மாலை அணிவித்து வாழ்த்து சொன்னார்கள் பலர். அப்போது ஜூனியர் பாஸ் என எழுதப்பட்ட மெகா சைஸ் கேக்கை வெட்டி திவாகரனுக்கும் தன் அம்மாவுக்கு ஊட்டி விட்டார். பதிலுக்கு அவர்களுக்கு கேக் ஊட்டி விட்டு வாழ்த்து தெரிவித்தனர். 

இதற்கு முன்னதாகவே அப்பாவின் காலில் விழுந்து வணங்கியவரிடம், `இதற்கு முன்பு நாம் பல கஷ்டங்களை அனுபவித்து இருக்கிறோம். இப்போது நமக்காகக் கஷ்டப்படுகிறோம். நாம் கும்பிடுகிற தெய்வம் நம்மைக் கைவிடாது இனி எல்லாம் நல்லபடியா நடக்கும்’ என மகனை ஆசிர்வதித்தார் திவாகரன்.

பிறகு 5 விதவைப் பெண்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கியதோடு, வந்திருந்தவர்கள் அனைவருக்கும் பிரியாணி விருந்து கொடுத்து அசத்தினார். பல இடங்களில் அன்னதானமும் வழங்கினர். உற்சாக மூடில் இருந்தவர், `சிக்கல் வராத அளவில் பிறந்த நாளுக்கு போஸ்டர் பிளக்ஸ் வைத்திருக்கலாமே’ என நெருக்கமானவர்களிடம் கேட்டார். அதற்கு, `நீங்கதான் என இழுத்தவர்களிடம்..,`விடுங்க இனிமே அடிக்கடி வைக்கிற மாதிரி இருக்கும். அப்ப பார்த்துக் கொள்வோம்’ என்றார்.

தனி அணி தொடங்கிய பிறகு யாரும் வெளிப்படையாக ஒரு எம்.எல்.ஏவும், ஏன் தகுதி நீக்கம் செய்யப்பட்டவர்கள் கூட இதுவரை நமக்கு ஆதரவு தெரிவிக்கவில்லை. இதற்கு முன் நெருக்கமாக உடன் இருந்தவர்கள் கூட, இப்போது தினகரன் அணியில் இருக்கிறார்கள். இனி நாம் என்ன செய்யப் போகிறோம் எனப் பலர் கேட்டனர்.

அதற்கு, அப்பா மகன் இருவருமே, `நமக்கான வேலைகள் அனைத்தும் திரைமறைவில் நடந்துகொண்டிருக்கிறது. யாரும் வெளியே சொல்லிவிட்டால், அதைத் தடுப்பதற்கும் தடை ஏற்படுத்துவதற்கும் காத்துக்கிடக்கிறார்கள். அதனால், 23ம் தேதி வரை அமைதியாக இருங்க. அதன் பிறகு இனிப்போடு சேர்ந்த அதிர்வேட்டுதான் நமக்கு’ எனப் புதிர் போட்டார்கள்’’ என்றனர் அருகில் இருந்தவர்கள். அப்படி என்னதான் திட்டம் வைத்திருக்கிறார்கள் எனக் குழம்பி நொந்தபடி திரும்பியிருக்கின்றனர் ஆதரவாளர்கள்.
 

மூலக்கதை