ஆந்திராவில் 60 பேர் சென்ற படகு ஆற்றில் மூழ்கியது 30 பேர் பரிதாப பலி?

தமிழ் முரசு  தமிழ் முரசு
ஆந்திராவில் 60 பேர் சென்ற படகு ஆற்றில் மூழ்கியது 30 பேர் பரிதாப பலி?

திருமலை : ஆந்திர மாநிலம், கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ளது பாப்பிகொண்டா பகுதி. இது  சுற்றுலாதலமாகும்.

2மலைகளுக்கு நடுவில் ஓடும் கோதாவரி ஆற்றை படகில் சென்றபடி சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து வருகின்றனர். இந்நிலையில், போலவரம் கிராமத்தை சேர்ந்த மலைவாழ் மக்கள் நேற்று அப்பகுதியில் நடந்த வாரச்சந்தையில் பொருட்கள் வாங்கிக்கொண்டு தனியார் படகில் வழக்கம்போல் வீட்டுக்கு புறப்பட்டனர்.

இவர்களுடன் சில சுற்றுலா பயணிகளும் இருந்தனர். மொத்தம் 60 பேர் பயணம் செய்தனர்.

கொண்டமோடலு என்ற இடத்தில் இருந்து ராஜமகேந்திரவரம் சென்று கொண்டிருந்தனர். அப்போது திடீரென சூறாவளி காற்று சுழன்றடித்தது.

காற்றின் வேகத்தை தாங்க முடியாத நிலையில் படகு ஆற்றில் கவிழ்ந்தது. இதனால் அதிலிருந்தவர்கள் கடும் அதிர்ச்சி அடைந்த காப்பாற்றும்படி அலறினர்.

சிலர் நீச்சல் அடித்து கரை சேர்ந்தனர். சுமார் 20 பேர் இவ்வாறு கரைக்கு வந்தனர்.

மேலும் 40பேரின் நிலை என்னவானது என்பது தெரியவில்லை.

இதுகுறித்து தகவல் அறிந்த தேவிப்பட்டினம் போலீசார் மற்றும் பேரிடர் மேலாண்மை மீட்பு படையினர் சம்பவ இடத்துக்கு வந்து மாயமான 40 பேரையும் மீட்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். விடிய விடிய மீட்பு பணி நடந்தும் படகை மீட்க முடியவில்லை.

இன்று காலை முதல் மீண்டும் மீட்பு பணி தொடர்ந்தது. விமானப்படை ஹெலிகாப்டர் மற்றும் போலவரம் அணைக்கட்டு கட்ட பயன்படுத்தி வரும் ராட்சத கிரேன்கள் மூலம் படகை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இதில் 30 பேர் இறந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. ஆனால் சடலங்கள் மீட்கப்படவில்லை.
மேலும் விபத்தில் சிக்கியவர்களில் மலைகிராம மக்களும் இருப்பதால் அதிகாரிகள் அங்கு சென்று, வீடுவீடாக கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.போலீசார் நடத்திய விசாரணையில், அனுமதியில்லாமலும் கூடுதலாக 7 பயணிகளுடனும் படகு இயக்கப்பட்டதால் விபத்து ஏற்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக தேவிப்பட்டினம் போலீசார் படகு உரிமையாளர் காஜாவை கைது செய்தனர்.

விபத்து குறித்து எஸ்பி ரவிபிரகாஷ் கூறுகையில், `போலவரம் கிராமத்தை சேர்ந்த மலைவாழ் மக்கள் வாரந்தோறும் தேவிப்பட்டினத்தில் நடக்கும் வாரச்சந்தைக்கு வந்து செல்வது வழக்கம். படகு விபத்துக்குள்ளானதில், 30 பேர் கரை சேர்ந்த நிலையில், 30க்கும் மேற்பட்டோர் இறந்திருக்கலாம்.

மீட்பு பணி தொடர்ந்து நடந்துகொண்டே இருக்கும்’’ என்றார்.

.

மூலக்கதை