கர்நாடக தேர்தல் முடிவுகள் மக்களவை வெற்றிக்கு அச்சாரம்: மகாராஷ்டிர பாஜ முதல்வர் நம்பிக்கை

தமிழ் முரசு  தமிழ் முரசு
கர்நாடக தேர்தல் முடிவுகள் மக்களவை வெற்றிக்கு அச்சாரம்: மகாராஷ்டிர பாஜ முதல்வர் நம்பிக்கை

மும்பை: கர்நாடக தேர்தல் முடிவுகள் அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் மக்களவை தேர்தலில் பாஜ வெற்றிக்கு அச்சாரம் போட்டிருப்பதாக மகாராஷ்டிர  முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளார். கர்நாடக சட்டமன்ற தேர்தலில் பாஜ தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்திருப்பதன் மூலம் வரவிருக்கும் மக்களவை தேர்தலில் அக்கட்சிக்கு மிகப்பெரிய  வெற்றி கிடைக்கும் என மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளார். கர்நாடக சட்டமன்ற தேர்தல் கடந்த 12ம் தேதி நடந்தது.

இதில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. அதன்படி பாஜ  104 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது.

இருப்பினும் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காத காரணத்தால் அங்கு  ஆட்சி அமைப்பதில் இழுபறி ஏற்பட்டுள்ளது. ஆளுநர் கையில் முடிவு இருக்கிறது.

இந்நிலையில் கர்நாடக தேர்தல் முடிவுகள் குறித்து மகாராஷ்டிர முதலவர் தேவேந்திர பட்னாவிஸ் மும்பையில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:  எடியூரப்பாவுக்கும், கர்நாடக மக்களுக்கும் எனது வாழ்த்துக்கள்.

கர்நாடகத்தில் தனிப்பெரும் கட்சியாக பாஜ உருவெடுத்துள்ளது. 2019 மக்களவை  தேர்தலில் கட்சிக்கு மிகப்பெரிய வெற்றி கிடைப்பதற்கு அடித்தளம் போடப்பட்டுள்ளது.

இந்த வெற்றிக்கான பெருமை அமித்ஷாவையும், மோடியையும்  சாரும். கர்நாடக தேர்தல் முடிவானது பிரதமர் மோடி மீதான நம்பிக்கைக்கு கிடைத்த தீர்ப்பாகும்.

இவ்வாறு பட்னாவிஸ் கூறினார்.
.

மூலக்கதை