வாழ்வா சாவா போராட்டத்தில் மும்பையை வீட்டுக்கு அனுப்ப காத்திருக்கிறோம்

தமிழ் முரசு  தமிழ் முரசு
வாழ்வா சாவா போராட்டத்தில் மும்பையை வீட்டுக்கு அனுப்ப காத்திருக்கிறோம்

மும்பை: மும்பையை வீட்டுக்கு அனுப்ப காத்திருப்பதாக பஞ்சாப் அணியின் கேப்டன் அஸ்வின் கூறியுள்ளார். ஐபிஎல் தொடரில் இன்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் - கிங்ஸ்லெவன் பஞ்சாப் அணிகள் மோதுகின்றன.

இந்த ஆட்டத்தில் தோல்வியடைந்தால் மும்பை அணி பிளே ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பை இழந்து வெளியேறும் நிலையில் உள்ளது. நடப்பு சாம்பியன் மும்பை  இந்தியன்ஸ்  5 வெற்றி, 7 தோல்வி என்று 10 புள்ளிகளுடன் பட்டியலில் 6-வது இடத்தில் இருக்கிறது.

இன்னும்   ஆட இருக்கும் 2  ஆட்டங்களில் தொடர் வெற்றி  பெற்றால் மட்டுமே அந்த அணியால் அடுத்த சுற்றுக்கு செல்ல முடியும் என்கிற கட்டாயத்தில் இருப்பதால்  முள் கிரீடத்தை சுமந்து கொண்டுள்ள நிலையில் இருக்கிறது மும்பை.   இந்த இரு ஆட்டங்களிலும் வெற்றி பெற்றாலும் 14 புள்ளிகளையே பெற முடியும். இந்த நிலை ஏற்பட்டால் மற்ற அணிகளின் முடிவை பொறுத்தே மும்பை அணியின் பிளே-ஆப் சுற்று தலைவிதி நிர்ணயிக்கப்படும்.



இந்த சீசனில் தொடக்க போட்டிகளில் அடுத்தடுத்து தோல்விகளை சந்தித்த ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ்  திடீரென்று  ஹாட்ரிக் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் சீரான முன்னேற்றம் கண்டு அனைவரையும் ஆச்சரியத்தில்  ஆழ்த்தி  பிளே ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பில் ஒட்டிக் கொண்டது.   ஆனால் கடந்த ஞாயிற்றுக்கிழமை ராஜஸ்தான் அணியிடம் 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் அடைந்த தோல்வியால் மும்பை அணி கடும் பின்னடைவை சந்தித்துள்ளது. இதற்கு  முந்தைய ஆட்டத்தில் வெற்றி பெற வேண்டிய  ராஜஸ்தான் அணியிடம்  சரியாக விளையாடாமல் சறுக்கியது.

அணியின் கேப்டன் ரோகித் சர்மா  இந்த லீக்கில்  3 முறை டக்-அவுட் ஆகி இருக்கிறார். கேப்டனே  இப்படி  இருப்பதால் இந்த அணியிலுள்ள மற்றவர்களும் சொதப்பி வருகிறார்கள்.



அஸ்வின் தலைமையிலான கிங்ஸ்லெவன் பஞ்சாப் அணி  இதுவரை ஆடிய  12 ஆட்டங்களில் 6 வெற்றி, 6 தோல்விகளுடன் 12 புள்ளிகள் பெற்று பட்டியலில் 5-வது இடத்தில் உள்ளது. நேற்றுமுன்தினம் பெங்களூரு அணிக்கு எதிராக 88 ரன்களில் சுருண்டு 10 விக்கெட்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது அணியின் உத்வேகத்தை சீர்குலைத்துள்ளது.

இந்த படுதோல்வியால் பஞ்சாப் அணி புள்ளிகள் பட்டியலில் 3வது இடத்தில் இருந்து 5வது இடத்துக்கு பின் தள்ளி சென்றது. ஏற்கனவே   பிளே ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பை  பெற்றுள்ள பஞ்சாப் அணி இன்னும் இழக்கவில்லை.

இன்றைய ஆட்டத்திலும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான கடைசி ஆட்டத்திலும் வெற்றி பெற்றால் 16 புள்ளிகளுடன் எந்தவித சிக்கலும் இல்லாமல் அடுத்த போட்டிக்கு செல்லும்.   இன்றைய ஆட்டத்தில் தோல்வியடைந்தால் கடைசி ஆட்டத்தில் கட்டாயம் வெற்றி பெற வேண்டும் என்ற நெருக்கடிக்கு தள்ளப்படும். அப்படியே வெற்றி பெற்றாலும் நெட் ரன்ரேட் விகிதமும் பிரச்னையாக உருவெடுக்கக்கூடும்.

இந்த இடியாப்ப சிக்கல்களை  உணர்ந்த பஞ்சாப் அணி இன்று மும்பையை அடித்து துவைக்க காத்திருக்கிறது.

பெங்களூரு அணிக்கு எதிரான தோல்வி கடும் ஏமாற்றமளிக்கிறது. கடந்த ஆட்டங்களில் பந்து வீச்சாளர்கள்தான் எங்களுக்குப் புள்ளிகளை பெற்றுத் தந்தனர்.

இந்த நிலையில் இன்று நடை பெறும்  ஆட்டம் குறித்து  அஸ்வின் நிருபர்களிடம் கூறியதாவது:  இன்றைய ஆட்டத்தில்  வெற்றியை மீண்டும் எங்கள் பக்கம் திருப்ப வேண்டும். மும்பையை வீட்டுக்கு அனுப்ப எங்களால் ஆன முயற்சிகளை மேற்கொள்ள  தயாராக இருக்கிறோம்.   புனேவில் நடைபெறும் கடைசி ஆட்டத்தில் என்ன நடைபெறுகிறது என்பதை அதன் பின்னர் பார்ப்போம்.

அணியின் பந்து வீச்சு ஓரளவுக்கு நன்றாகவே உள்ளது, நிறைய சர்வதேச அனுபவ வீரர்கள் எங்களிடம் உள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.

இதனால் இரு அணிகளும் வாழ்வா சாவா போராட்டத்தில் ஒருவரை ஒருவர் எதிர் கொள்ள இருக்கிறார்கள்.

வீழ்வது யார்? அடுத்த சுற்றுக்கு செல்வது யார் என இன்று  மும்பை  வான்கடே மைதானம் முடிவு செய்யும்.

.

மூலக்கதை