ஈடன் கார்டனில் இன்று நைட் ரைடர்சை பழி தீர்க்க காத்திருக்கும் ராயல்ஸ்

தமிழ் முரசு  தமிழ் முரசு
ஈடன் கார்டனில் இன்று நைட் ரைடர்சை பழி தீர்க்க காத்திருக்கும் ராயல்ஸ்

கொல்கத்தா: ஐ. பி. எல். கிரிக்கெட் லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் இன்று மோதுகின்றன.

கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று இரவு நடைபெறும் 49வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ்-ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் விளையாடுகின்றன. அடுத்த சுற்றுக்கு செல்ல வேண்டிய நிர்ப்பந்தமான சூழலில் இரு அணிகளும் மோதுவதால்  இன்றைய ஆட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்துள்ளது.

கொல்கத்தா, ராஜஸ்தான் அணிகள் இதுவரை தலா 12 ஆட்டங்களில் விளையாடி 6 வெற்றி, 6 தோல்வி  என இரண்டு அணிகளும்  12 புள்ளிகள் பெற்று அடுத்த சுற்றுக்கு செல்லும்  நிலையில் உள்ளன. ஐ. பி. எல்.

போட்டி வரலாற்றில் இரு அணிகளும் இதுவரை 16 முறை நேருக்கு நேர் சந்தித்து இருக்கின்றன. இதில் ராஜஸ்தான் அணி 9 முறையும், கொல்கத்தா அணி 7 தடவையும் வென்று இருக்கின்றன.
தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா அணியில்   கிறிஸ் லின், ராபின் உத்தப்பா, தினேஷ் கார்த்திக் ஆகியோர் பேட்டிங்கில் நல்ல நிலையில் உள்ளனர்.



சுனில் நரேன், ஆந்த்ரே ரஸ்செல் ஆகியோர் பேட்டிங் மட்டுமின்றி பந்து வீச்சிலும் அணிக்கு நல்ல பங்களிப்பை அளித்து வருகிறார்கள். சுனில் நரேன் இதுவரை 14 விக்கெட்டுகள் வீழ்த்தி இருக்கிறார்.

தொடர்ந்து 2 தோல்விக்குப் பிறகு  கிங்ஸ்லெவன் பஞ்சாப் அணிக்கு எதிரான  ஆட்டத்தில்  அணியில் மாற்றம் உண்டானது. ஐபிஎல் வரலாற்றில் 4-வது அதிகபட்ச ரன் குவிப்பாக 245 ரன்கள் விளாசி மிரட்டியதுடன் அந்த ஆட்டத்தில் 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று திடீர் கவனத்தை ஈர்த்தது.

கொல்கத்தா தனது சொந்த மண்ணில் பங்கேற்கும் கடைசி லீக் ஆட்டமாக இது அமைந்து இருப்பதால் இந்த ஆட்டத்தில் சொதப்புவார்களா இல்லை சோபிப்பார்களா என்பது இன்று தெரிந்து விடும்.

ரஹானே தலைமையிலான ராஜஸ்தான் அணி  கடந்த 3 லீக் ஆட்டங்களில் தொடர்ந்து வெற்றி பெற்று மிரட்டி வருகிறது. இந்த அணியில் தற்போது   ஜோஸ்பட்லர் அடுத்தடுத்து 5 அரை சதம் அடித்து பேட்டிங்கில் முன்னிலை வகிக்கிறார்.

பென் ஸ்டோக்ஸ் சிறந்த ஆல்-ரவுண்டராக செயல்பட்டு வருகிறார். ஜோப்ரா ஆர்ச்சர் பந்து வீச்சில் அபாரமாக விளங்குகிறார்.

அவர் 7 ஆட்டங்களில் ஆடி 13 விக்கெட்டுகளை சாய்த்து இருக்கிறார். இந்த சீசனில் இரு அணிகளும் 2-வது முறையாக மோதுகின்றன.

கடந்த ஏப்ரல் 18-ம் தேதி ஜெய்ப்பூரில் நடைபெற்ற ஆட்டத்தில் கொல்கத்தா அணி 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தானை வீழ்த்தியது.

இந்த தோல்வியால் துவண்டு போன  ராஜஸ்தான் இன்று கொல்கத்தாவை புரட்டி எடுக்க காத்திருக்கிறது.

.

மூலக்கதை