தமிழறிஞரும், பட்டிமன்ற நடுவரும், இலக்கியச் சொற்பொழிவாளருமான டாக்டர் அ. அறிவொளி அவர்கள் காலமானார்

வலைத்தமிழ்  வலைத்தமிழ்
தமிழறிஞரும், பட்டிமன்ற நடுவரும், இலக்கியச் சொற்பொழிவாளருமான டாக்டர் அ. அறிவொளி அவர்கள் காலமானார்

திருச்சியைச் சேர்ந்த தமிழறிஞரும், பட்டிமன்ற நடுவரும், ஆன்மிக இலக்கியச் சொற்பொழிவாளருமான டாக்டர் அ. அறிவொளி (80) செவ்வாய்க்கிழமை இரவு காலமானார்.  தூர்தர்ஷன் தொடங்கி அனைவரும் மேடைகளில் ரசித்த  ஓர் ஆளுமை.  கம்பன் கழகம் உள்ளிட்ட மேடைகளில் எளிமையான மொழியில் பேசி, சாமானியனை சிரிக்க வைத்து, சிந்திக்க வைத்தவர். தமிழே பேச்சாக , மூச்சாக இறுதிவரை வாழ்ந்தவர் .. 

அறிவார்ந்த பட்டிமன்றங்களை டாக்டர் அறிவொளி அவர்கள் தூர்தர்ஷன் தொடங்கி அனைத்து தொலைக்காட்சிகளிலும்  நடத்தினார்.

டென்மார்க் தலைநகர் கோபன் ஹேகன் பல்கலைக்கழகத்தில் மாற்று மருத்துவத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். உலக நாடுகளுக்கு மாற்று மருத்துவத்தைக் கொண்டு சென்றவர்.

அண்ணாமலை பல்கலைக்கழகம்,  பூம்புகார் கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றியுள்ளார்.

திருக்கோயில்கள் வரிசைகள் என்ற தலைப்பில் தமிழகம் மட்டுமின்றி நாடுமுழுவதும் உள்ள பிரசித்தி பெற்ற கோயில்கள், பஞ்சபூத தலங்களுக்கு நேரில் சென்று அதன் வரலாறுகளையும் சிறப்புகளையும் ஆராய்ந்து பதிவிட்டவர்.

120-க்கும் மேற்பட்ட நூல்களையும் எழுதியுள்ள இவர், திருச்சி கம்பன் கழகத்தில் ஆய்வுரை திலகம் என்ற பட்டம் மற்றும் கபிலவாணர் விருது பெற்றவர்.

1986-இல் வழக்காடு மன்றத்தை முதன்முதலாக அறிமுகப்படுத்தியவர். இவரது சொந்த ஊர் நாகை மாவட்டம் சீர்காழியை அடுத்த சிக்கல் ஆகும்.

திருச்சியில் வசித்து வந்த இவர் உடல்நலக்குறைவால் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு காலமானார். இவருக்கு மனைவி, இரண்டு மகன்கள், இரண்டு மகள்கள்உள்ளனர்.

அவரது மறைவு தமிழ்நாட்டிற்கு ஒரு பேரிழப்பு. அன்னாரது இழப்பால் வாடும் அவர் தம் குடும்பத்தாருக்கும், நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தியடைய  வலைத்தமிழ்.காம் வாசகர்கள் சார்பாக இறையருளை பிரார்த்திக்கிறோம்.

இவரது இறுதிச் சடங்கு திருச்சி டி.வி.எஸ். டோல்கேட் அருகில் உள்ள ஹனிபா  காலனியில் உள்ள அவரது இல்லத்தில் புதன்கிழமை மாலை 3 மணியளவில் நடைபெறவுள்ளது.

சிந்திப்பதை...பேசுவதை டாக்டர் அ. அறிவொளி அவர்கள் நிறுத்திக்கொண்டார் .. இருப்பினும் அவர் மேடைகளில் ஏற்படுத்திய தாக்கங்கள், பேசிய சிந்தனைகள், எழுதிய எழுத்துகள் என்றும் நிலைத்திருக்கும்...  தமிழுக்கு மிகப்பெரிய இழப்பு...

 

இறுதி அஞ்சலிகள் ...

 

மூலக்கதை