முதல் ஆட்டத்தில் தோற்றதற்கு பதிலடி: சென்னையை வீழ்த்தியது கொல்கத்தா

தமிழ் முரசு  தமிழ் முரசு
முதல் ஆட்டத்தில் தோற்றதற்கு பதிலடி: சென்னையை வீழ்த்தியது கொல்கத்தா

கொல்கத்தா: ஐபிஎல் போட்டியின் முதல் லீக் போட்டியில் தோற்றதற்கு பதிலடியாக கொல்கத்தாவில் நேற்று நடைபெற்ற போட்டியில் சென்னையை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி பதிலடி கொடுத்தது கொல்கத்தா நைட் ரைடர்ஸ். ஐபிஎல் தொடரின் 33வது லீக் போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ்-சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையே நேற்று கொல்கத்தாவில் நடைபெற்றது.

டாஸ் வென்ற  கொல்கத்தா அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதனால் சென்னை அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் ஷேன் வாட்சன், டுபிளெஸ்சி களம் இறங்கினர்.

இருவரும் நல்ல துவக்கத்தை தந்தனர். அதற்கு பிறகு வந்த ஆட்டக்காரர்களும் இரட்டை இலக்கத்தில்தான் அவுட்டாகினர்.

 வாட்சன்-36,(25பந்துகள்), டுபிளெஸ்சி-27(15), சுரேஷ் ரெய்னா-31(26), அம்பாதி ராயுடு-21(17), ரவீந்திர ஜடேஜா-12(12) ரன்கள் எடுத்தனர்.

அதிரடியாக விளையாடிய டோனி 25 பந்துகளில் 43 ரன்களுடனும்,  கரண் சர்மா எந்த பந்தையும் சந்திக்காமலும் களத்தில் இருந்தனர். சென்னை அணி 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 177 ரன்களை சேர்த்திருந்தது.   கொல்கத்தா அணியின் சுனில் நரேன், பியூஷ் சாவ்லா ஆகியோர் தலா 2 விக்கெட்களும்,  குல்தீப் யாதவ் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

அடுத்து களமிறங்கிய கொல்கத்தா அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியாக இருந்தது. முதல் ஓவரின் கடைசிப்பந்தில்  கிறிஸ் லின் 12(6பந்துகள்) ரன்கள் எடுத்து அவுட்டானார்.



அடுத்து ஆட வந்த ராபின் உத்தப்பாவும் 5வது ஓவரில் 8 பந்துகளில் 6 ரன் எடுத்து அவுட்டானார். அதனால் கொல்கத்தா அணியின் வெற்றி வாய்ப்பு திசை மாறும் நிலையில் இருந்தது.

நன்றாக ஆடிக்கொண்டிருந்த தொடக்க ஆட்டக்காரர் சுனில் நரைன் 20பந்துகளில் 32 ரன் குவித்து அவுட்டானார். ரிங்கு சிங்  18 பந்துகளில் 16 ரன்கள் எடுத்து நடையை கட்டினார்.

அதனால் 4 விக்கெட் இழப்புக்கு  12வது ஓவரில் 97 ரன்கள் மட்டுமே குவித்து தடுமாற்றத்தில் இருந்தது கொல்கத்தா.

ஆனால் அணியின் கேப்டன்  தினேஷ் கார்த்திக்,  சுப்மன் கில் ஆகியோர் அதிரடியாக விளையாடி கடைசி வரை அவுட்டாகமல் 93 ரன்கள் குவித்து அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற வைத்தனர். தினேஷ் கார்த்திக் 18 பந்துகளில் 45 ரன்களும், கில் 36 பந்துகளில் 57 ரன்களும் குவிக்க கொல்கத்தா அணி 17. 4 ஒவரிலேயே 4 விக்கெட் இழப்புக்கு 180 ரன்களை குவித்தது.

சென்னை அணி சார்பில்  7 வீரர்கள் பந்து வீசினர். அதில்  லுங்கி என்ஜிடி, ஆசிப், ஜடேஜா, ஹர்பஜன் சிங் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர்.
ஆட்டநாயகனாக சுனில் நரேன் தேர்வு செய்யப்பட்டார்.

ஐபிஎல் தொடரின் இந்த சீசனில் டாஸ் வென்று பீல்டிங்கை தேர்வு செய்யும்  அணி தொடர்ந்து ேதாற்பது வாடிக்கையாக உள்ளது.

கடந்த சில ஆட்டங்களில் ராஜஸ்தான்,  பெங்களூர், டெல்லி, மும்பை  என தொடர் உதாரணங்கள் உள்ளன.

ஆனால் இந்த நிலைமை நேற்று கொல்கத்தா அணி டாஸ் வென்று பீல்டிங்கை தேர்வு செய்தாலும் வெற்றி பெற்றுள்ளது.

.

மூலக்கதை