சிஎஸ்கேவை பழிதீர்க்க காத்திருக்கும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் சவாலில் சறுக்குமா சாதிக்குமா?

தமிழ் முரசு  தமிழ் முரசு
சிஎஸ்கேவை பழிதீர்க்க காத்திருக்கும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் சவாலில் சறுக்குமா சாதிக்குமா?

கொல்கத்தா: ஐபிஎல் தொடரில் இன்று இரவு கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறும் 33வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன. டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 8 ஆட்டங்களில் 6 வெற்றிகளை குவித்து 12 புள்ளிகளுடன் பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறது.   தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா அணி 8 ஆட்டங்களில் விளையாடி 4 வெற்றி, 4 தோல்விகளுடன் 8 புள்ளிகள் பெற்று பட்டியலில் 4-வது இடத்தில் உள்ளது.

ஐபிஎல் போட்டிகளில் இந்த அணிகள்  19 முறை மோதியுள்ளன. இதில் 12 முறை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வென்றுள்ளது.    இந்த சீசனில்  சென்னையில் நடைபெற்ற ஒரே போட்டியில் கொல்கத்தா அணியை சென்னை அணி வீழ்த்தியுள்ளது.

இந்த அணிகள் மோதும் 2வது  போட்டி கொல்கத்தாவில் இன்று இரவு நடக்கிறது.

சென்னை அணியின் பலமாக ேடானி  இருந்து வருகிறார்.    பெங்களூர், கொல்கத்தா அணிகள் 200க்கு மேல் ரன் குவித்த போட்டிகளிலும் சென்னை அணி அசத்தல் வெற்றி பெற்றிருக்கிறது.   தேவைக்கு ஏற்ப சென்னை அணியில்  அடிக்கடி மாற்றங்களை செய்து வருகிறார் டோனி. இந்த அணியில் டோனி மட்டுமின்றி அம்பாதி ராயுடு, ஷேன் வாட்சன், டு பிளசிஸ், பிராவோ, சுரேஷ் ரெய்னா என பலரும் அசத்தி வருகின்றனர்.

கொல்கத்தாவை இந்த சீசனில் ஏற்கனவே வீழ்த்தியிருப்பது இவர்களது பலம். இந்த தோல்வியே கொல்கத்தா அணியை வெற்றிக்கு முனைப்பு காட்ட வைக்கும். கடந்த முறை அதிரடியாக விளையாடி 203 ரன்கள் எடுத்தும் தோல்வி அடைந்ததால் இந்த முறை கொல்கத்தா எச்சரிக்கையாக இருக்கும்.

போட்டி உள்ளூரில் நடப்பது கொல்கத்தாவுக்கு பெரிய பலமாகவும், சென்னைக்கு சவாலாகவும் இருக்கும்.

கேப்டன் தினேஷ் கார்த்திக், கிறிஸ் லின், சுனில் நரேன், ராபின் உத்தப்பா, நிதிஷ் ரானா ஆகியோர் தொடர்ந்து அதிரடி காட்டி வருகின்றனர். அதிலும் ஆண்ட்ரே ரஸல்  இடையில் வந்து ஆட்டத்தின் போக்கை மாற்றிவிடுவதும் கொல்கத்தாவின் பலம்.

சென்னையில் ஏப். 10ம் தேதி நடந்த போட்டியில்  தோற்றதற்கு  கொல்கத்தா  உள்ளூரில் நடைபெறும் போட்டியில் சென்னையை பழிவாங்குமா, அடங்கிப்போகுமா என்பது இன்று இரவு தெரியும்.

.

மூலக்கதை