எச்1பி, எச்4 விசா நடைமுறையை கடுமையாக்குகிறது அமெரிக்கா

தினகரன்  தினகரன்

வாஷிங்டன்: எச்1பி, எச்4 விசா நடைமுறைகளை அதிபர் டிரம்ப் நிர்வாகம் கடுமையாக்கி வருவதாக அமெரிக்க குடியுரிமை இயக்குனர் பிரான்சிஸ் சிஸ்னா தெரிவித்துள்ளார். அதிக திறமை வாய்ந்த தொழிலாளர்கள் அமெரிக்காவில் பணியாற்ற எச்1பி விசா வழங்கப்படுகிறது. இவற்றை இந்திய ஐ.டி ஊழியர்கள் அதிகம் பயன்படுத்துகின்றனர். இவர்களின் வாழ்க்கைத்துணைவர் எச்4 விசாவில் அமெரிக்கா வருகிறார்கள். இவர்களும் அமெரிக்காவில் வேலை பார்க்கும் அங்கீகாரத்தை முன்னாள் அதிபர் ஒபாமா தலைமையிலான நிர்வாகம் கடந்த 2015ம் ஆண்டு வழங்கியது. கடந்த 2017ம் ஆண்டு எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி எச்1பி விசாதாரர்களின் வாழ்க்கைத்துணைவர் 71,287 பேருக்கு அமெரிக்காவில் பணியாற்ற அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. இவர்களில் 94 சதவீதம் பேர் பெண்கள், அதிலும் 93 சதவீதம் பேர் இந்தியாவைச் சேர்ந்தவர்கள். சீனாவை சேர்ந்தவர்கள் 4 சதவீத பேர் மட்டுமே உள்ளனர். தேர்தல் வாக்குறுதிப்படி அதிபர் டிரம்ப் தலைமையிலான நிர்வாகம், விசா மற்றும் குடியேற்ற விதிமுறைகளில் கடுமையாக்கி வருகிறது. இது தொடர்பாக அமெரிக்க செனட் உறுப்பினர் சக் கிராஸ்லேவுக்கு, குடியுரிமை சேவை துறை இயக்குனர் பிரான்சிஸ் சிஸ்னா எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: எச்1பி விசா எண்ணிக்கையை கட்டுப்படுத்த எலக்ட்ரானிக் பதிவு முறையை நிறுவ திட்டமிட்டுள்ளோம். மிக திறமைவாய்ந்த வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு மட்டுமே எச்1பி விசா கிடைக்கும். எச்1பி விசா முறைகேடுகளை தடுக்க தனி இமெயில் ஒன்றை உருவாக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.இதை எல்1பி விசா திட்டத்துக்கும் விரிவுபடுத்துகிறோம். எச்4 விசாதாரர்களுக்கு அளிக்கப்படும் வேலை வாய்ப்பு அங்கீகாரத்தை நிறுத்தவும் அதிபர் டிரம்ப் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. இவ்வாறு கூறியுள்ளார்.எச்4 விசாதாரர்களுக்கு அளிக்கப்படும் வேலைவாய்ப்பு நிறுத்தப்படுவதால், இனி கணவருடன் அமெரிக்கா செல்லும் பெண்கள், அங்கு சென்று குடும்பத் தலைவியாக மட்டுமே இருக்க முடியும்.

மூலக்கதை