'கடவுளே இந்த குழந்தைகளை ஆளாக்கும் வரை ஆயுளை கொடு!'- 63 வயது தந்தையின் வேண்டுதல்

விகடன்  விகடன்
கடவுளே இந்த குழந்தைகளை ஆளாக்கும் வரை ஆயுளை கொடு! 63 வயது தந்தையின் வேண்டுதல்

கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் பையாகுன்னம் கிராமத்தைச் சேர்ந்த சசிதரன் - சுஜதா தம்பதிகளுக்கு திருமணமாகி பல ஆணடுகளாக குழந்தை பிறக்கவே இல்லை. தம்பதியர் கோயில் கோயிலாக ஏறி வேண்டினார்கள். 'பாக்ட்'  நிறுவனத்தில் பணி புரிந்த சசிதரன் பணியில் இருந்தும் ஓய்வு பெற்றார். இந்நிலையில், சுஜதா கர்ப்பமடைந்தார். சசிதரன்- தம்பதியர் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. பிரசவத்தில் ஒன்றல்ல இரண்டல்ல மூ்னறு குழந்தைகள் பிறந்தன. சசிதரன் தம்பதி மட்டுமல்ல உறவினர்களும் நண்பர்களும் பெரும் மகிழ்ச்சியடைந்தனர்.

கோப்புப் படம்

குழந்தைகள் பிறந்த போது சசிதரனுக்கு 59 வயது ஆகியிருந்தது. ஆண் குழந்தைகளுக்கு சிவசங்கரன், சிவாதத் என்றும் பெண் குழந்தைக்கு ஷிவானி என்றும் பெயரிட்டு கண்ணும் கருத்துமாக வளர்த்து வருகிறார்.குழந்தைகள் மூன்று பேரும் பள்ளிக்கு செல்லும் பருவத்தை எட்டினர். அருகில் உள்ள பள்ளியில் சசிதரன் குழந்தைகளை சேர்த்தார். தினமும் காலை 10 மணிக்கு சசிதரன் குழந்தைகளை பள்ளிக்கு அழைத்து செல்கிறார். இரு குழந்தைகள் தோளிலும் அமர்ந்தவாறும் ஒரு குழந்தையை நடத்தியும் சசிதரன் பள்ளிக்கு கொண்டு செல்கிறார்.மூன்று குழந்தைகளையும் தந்தை சசிதரன் பள்ளிக்கு அழைத்து செல்வதை பார்க்கவே ஒரு கூட்டம் கூடுகிறது. மாலை 3.30 மணியளவில் பள்ளியில் இருந்து குழந்தைகளை மீண்டும் வீட்டுக்கு அழைத்து வருகிறார். 

இது குறித்து சசிதரன் கூறுகையில், ''என் குழந்தைகள்தான் எனக்கு உலகம். என் குழந்தைகளை வளர்த்து ஆளாக்கும் வரை எனக்கு ஆயுளை கொடு என்று மட்டும்தான் கடவுளிடம் நித்தம் நித்தம் நான் கேட்கிறேன்''  என்கிறார். தற்போது, சசிதரனுக்கு 63 வயதாகிறது. 

சசிதரனின் ஆசை நிறைவேறட்டும்!

மூலக்கதை