சுண்ணாம்புகல் சுரங்கத்தால் நிலநடுக்க பீதி! அச்சத்தில் 5 கிராம மக்கள்.

விகடன்  விகடன்
சுண்ணாம்புகல் சுரங்கத்தால் நிலநடுக்க பீதி! அச்சத்தில் 5 கிராம மக்கள்.

அரியலூர் மாவட்டத்தில் மூடாமல் கிடக்கும் சுண்ணாம்புகல் சுரங்கங்களால் தான் நிலநடுக்கமே வருகிறது. சுரங்கங்களை மூட வலியுறுத்தி  5 கிராம மக்கள் கருப்பு கொடி ஏற்றி போராட்டத்தை நடத்தி வருகிறார்கள்.

  

அரியலூர் மாவட்டம் செந்துறை தாலுக்கா ஆலத்தியூர், தளவாய் பகுதியில் ராம்கோ மற்றும் சங்கர் என  2தனியார் சிமெண்ட் ஆலைகள் அமைந்துள்ளன. இவ்ஆலைகளுக்கு சொந்தமாக பல சுண்ணாம்பு கல் சுரங்கங்கள் செயல்பட்டு வருகின்றது. இந்நிலையில் கடந்த மாதம் புதுப்பாளையம் கிராமத்தில் ராம்கோ சிமெண்ட் ஆலை சார்பில் புதிய சுண்ணாம்பு கல் சுரங்கம் அமைக்க கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்ற போது அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

                                        

  இந்நிலையில் இந்தியா சிமெண்ட் ஆலைகளின்  விதிமுறைகளை மீறிய  சுரங்க செயல்பாடுகளை தடுக்க வேண்டும் தோண்டபட்ட சுரங்கங்களை மூடி மேய்ச்சல் நிலம் அமைத்து தர வேண்டும். புதிய சுண்ணாம்பு கல் சுரங்கத்திற்கு மாவட்ட நிர்வாகம் மற்றும்  மாசுகட்டுப்பாட்டு வாரியம் அனுமதி வழங்கக்கூடாது என வலியுறுத்தி ஆதனக்குறிச்சி,  மணக்குடையான். ஆலத்தியூர் மற்றும் துளார்  ஊராட்சியை சேர்ந்த 5க்கும் மேற்பட்ட கிராமங்களில்  பாதிக்கபட்ட மக்கள் தங்கள் வீடுகளில் கருப்பு கொடி கட்டி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மீறி புதிய சுரங்கத்திற்கு அனுமதி வழங்கினால் போராட்டம் தொடர் போராட்டமாக நடத்தப்படும் என கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.

                                      


போராட்டகாரர்கள் சிலரிடம் பேசினோம்.”அரசின் விதிகளை காற்றில் பறக்கவிட்டு அதிக ஆழத்தில் சுணணாம்புக்கல் சுரங்கங்கள் தோண்டப்படுவதால் நிலத்தடி நீர் மட்டம் பாதிக்கப்பட்டு அருகில் உள்ள கிராமங்களிலும் குடிநீர் பிரச்னை ஏற்படுகின்றன. இம்மாவட்டத்தில் 166-க்கும் மேற்பட்ட சுரங்கங்கள் உள்ளன. இங்குள்ள ஒவ்வொரு சுண்ணாம்பு சுரங்கங்களும் 200 அடி முதல் 300 அடி வரை தோண்டியுள்ளார்கள்.  இதில் முக்கால்வாசி சுரங்கங்களை மூடாமல் வைத்துள்ளனர். 

நான்கு வருடங்களுக்கு முன்பு சேலம், திருச்சி, நகரத்தை மையப்படுத்தி லேசான நிலநடுக்கம் உணரப்பட்டது. இது அரியலூரை மையப்படுத்தி வந்ததாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால் தனியார் சிமெண்ட் ஆலைகள் சுரங்கம் தோண்டுவதை நிறுத்தியபாடும் இல்லை. ஒரு சுரங்கம் இருந்தால் அடுத்த சுரங்கம் ஐநூறு அடி தள்ளித்தான் தோண்ட வேண்டும் என்று விதி உள்ளது. ஆனால் இங்கு ஐந்து அடிக்கும் பத்தடிக்கும் அருகில் அமைந்துள்ளது.

                              

இந்த மாவட்டத்தில் எவ்வளவு விதிமீறல்கள் நடைபெற்றுவருகின்றன. மக்களுக்கு ஆபத்தை ஏற்படுத்து சுண்ணாம்பு சுரங்களை மூடவில்லை என்றால் இம்மாவட்டமே வாழ தகுதியற்ற மாவாட்டமாக மாறிவிடும்.எங்களுடைய கால கட்டம் முடிந்துவிட்டது வருங்கால சந்ததியினருக்காக தான் போராடிக்கொண்டிருக்கிறோம்.எங்களுடைய கோரிக்கைகளை நிறைவேற்ற மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்  இல்லையென்றால் கிராம மக்கள் ஒன்றிணைந்து போராட்டத்தை தீவிரப்படுத்துவோம் எனவும் கிராம மக்கள் எச்சரித்துள்ளனர்.

மூலக்கதை