40 ஆயிரம் கோடி குறைத்த நிலையில் இந்தாண்டும் தமிழகத்துக்கு நிதி குறைக்கப்படுமா?: நிதி ஆயோக் தலைவர் தந்த விளக்கத்தால் அதிர்ச்சி

தினகரன்  தினகரன்

புதுடெல்லி: தென் மாநிலங்கள் முன்னேறிய அளவுக்கு பா.ஜ ஆளும் மாநிலங்களில் வளர்ச்சி இல்லை என நிதி ஆயோக் தலைவர் அபிதாப் காந்த்  குறிப்பிட்டுள்ளார். இதனால், கடந்த ஆண்டு தமிழகத்துக்கு நிதி குறைக்கப்பட்டதுபோல, இந்த ஆண்டும் நிதி குறைக்கப்பட வாய்ப்பு உள்ளதாக  தகவல்கள் வெளியாகியுள்ளன.டெல்லியில் உள்ள ஜமியா மிலியா இஸ்லாமிய பல்கலைக்கழகத்தில் அப்துல் காபர்கான் நினைவு சொற்பொழிவு நிகழ்ச்சி நடந்தது. இதில் நிதி ஆயோக்  தலைவர் அபிதாப் காந்த் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். இந்தியாவின் மாற்றத்துக்கான சவால்கள் பற்றி அபிதாப் காந்த் பேசியதாவது:இந்தியாவில் தென் மாநிலங்கள் மற்றும் மேற்கு மாநிலங்கள் வேகமாக வளர்ச்சி அடைந்து வருகின்றன. அதே நேரத்தில் கிழக்கு பகுதியில்  அமைந்துள்ள உத்தரப் பிரதேசம், சட்டீஸ்கர், மத்தியப் பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்கள் கல்வி, சுகாதாரம் போன்ற சமூக நலன்  விஷயங்களில் பின்தங்கியுள்ளன. இந்த மாநிலங்கள் நாட்டையே பின்தங்க செய்துள்ளன. இந்தியாவில் ஒருங்கிணைந்த வளர்ச்சி ஏற்பட முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும். கல்வி, சுகாதாரம் போன்ற முக்கிய துறைகளில் இந்தியா  மிகவும் பின்தங்கியுள்ளது. நமது மாணவர்களின் கல்வித் திறன் மிக மோசமாக உள்ளது. இங்கு 5ம் வகுப்பில் படிக்கும் ஒரு மாணவனால், 2ம் வகுப்பு  பாடத் திட்டத்தில் உள்ள கழித்தல் கணக்கை கூட போட முடியவில்லை. அவனால் தன் தாய் மொழியை கூட ஒழுங்காக வாசிக்க முடியவில்லை. இந்த நிலையை நாம் மேம்படுத்தவில்லை என்றால், நாம் வளர்ச்சியடைவது சிரமம். ஐ.நா கடந்த 2016ம் ஆண்டு வெளியிட்ட 188 நாடுகளின் மனித  வளர்ச்சி பட்டியலில் இந்தியா 133வது இடத்தை பிடித்திருந்தது. கல்வி, தனி நபர் வருமானம் போன்றவற்றின் அடிப்படையில் நான்கு பிரிவுகளாக  நாடுகள் புள்ளி விவரங்களுடன் இந்த பட்டியல் தயாரிக்கப்படுகிறது. எகிப்து(111), இந்தோனேஷியா(113), தென் ஆப்பிரிக்கா(119) மற்றும் ஈராக் (121) ஆகிய  நாடுகளுக்கு பின்னால் இந்தியா இடம் பெற்றுள்ளது. நடுத்தர மனித வளர்ச்சி பிரிவில் இந்தியா இடம் பெற்றுள்ளது. மனித வளர்ச்சி பட்டியலில்  இந்தியாவின் மதிப்பு 0.624 ஆக உள்ளது. தெற்காசியாவில் இலங்கை மற்றும் மாலத்தீவை விட இந்தியா பின்னால் உள்ளது.இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 7 முதல் 8 சதவீதமாக வளர்ந்து கொண்டிருக்கிறது. இது மனித வளர்ச்சி பட்டியலில் பிரதிபலிக்க வேண்டும்.  இதற்கு மாவட்டங்கள் மற்றும் மாநில அளவில் தற்போது உள்ள நிலைையை முழுமையாக மாற்ற வேண்டும். தொழில் செய்வதில் நாம்  முன்னேறியுள்ளோம். ஆனால் மனித வளர்ச்சி பட்டியலில் நாம் பின்தங்கியுள்ளோம். இவ்வாறு அவர் பேசினார். இந்நிகழ்ச்சியில் கல்வி, சுகாதாரம், ஊட்டசத்து, வேளாண்மை, நீர்வளம் ஆகிய 49 பிரிவுகளின் அடிப்படையில் 101 லட்சிய மாவட்டங்களின் தரப்  பட்டியலையும் நிதிஆயோக் வெளியிட்டது. மாநிலங்களுக்கு இடையே போட்டியை ஏற்படுத்தும் வகையில் வரும் மே மாதம் முதல், படிப்படியான  வளர்ச்சி அடிப்படையில் இந்த மாவட்டங்கள் பட்டியலிடப்படவுள்ளன. பின்தங்கியுள்ள மாநிலங்கள் என நிதி ஆயோக் தலைவர் அபிதாப் காந்த் குறிப்பிட்ட மாநிலங்கள் அனைத்தும் பா.ஜ ஆட்சி மற்றும் கூட்டணி ஆட்சி  நடைபெறும் மாநிலங்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், தமிழகத்திற்கு கடந்த ஆண்டு 40 ஆயிரம் கோடி நிதி குறைக்கப்பட்டது. இது குறித்து  மாநில அரசு சார்பில் பல முறை மத்திய அரசுக்கு கடிதம் எழுதப்பட்டது. கடந்த வாரம், நிதி அமைச்சரும் துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம்,  டெல்லி சென்று நிதி ஆயோக் தலைவர் மற்றும் நிதி அமைச்சர் அருண் ஜெட்லி, இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோரைச் சந்தித்துப்  பேசினார். அப்போது தமிழகத்துக்கு கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.நிதி ஆயோக் விதிப்படி, மக்கள் தொகை அடிப்படையில்தான் மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கப்படுகிறது. தமிழகத்தில் குடும்பக் கட்டுப்பாட்டு திட்டத்தை  சிறப்பாக அமல்படுத்துவதால், மக்கள் தொகை பெருமளவில் குறைந்துள்ளது. இதனால், தமிழகத்திற்கு நிதி பெருமளவில் கடந்த ஆண்டு  குறைக்கப்பட்டது. இந்த விதிமுறைக்கு ஜனாதிபதி ஒப்புதல் அளித்துள்ளார். இதனால் இந்த விதிமுறையை மாற்ற வேண்டும் என்றால், ஜனாதிபதியின்  ஒப்புதல் தேவை. இதனால் கடந்த ஆண்டு போலவே இந்த ஆண்டும் நிதி ஒதுக்கீடு அளவீடு செய்யப்படும் என்று கூறப்படுகிறது.* தென் மற்றும் மேற்கு மாநிலங்கள் வேகமாக வளர்ச்சி அடைந்து வருகின்றன. * அதே நேரத்தில் கிழக்கு  பகுதியில் அமைந்துள்ள உத்தரப் பிரதேசம், சட்டீஸ்கர், ம.பி., ராஜஸ்தான் ஆகிய மாநிலங்கள் பின்தங்கி விட்டன.* கல்வி, சுகாதாரம் போன்ற சமூக நலன் விஷயங்களில் இந்த மாநிலங்கள் நாட்டையே பின்தங்க செய்துள்ளன. * அபிதாப் காந்த் குறிப்பிட்ட மாநிலங்கள் அனைத்தும் பா.ஜ ஆட்சி, கூட்டணி ஆட்சி நடைபெறும் மாநிலங்கள்.* தமிழகத்திற்கு கடந்த ஆண்டு 40 ஆயிரம் கோடி நிதி குறைக்கப்பட்டது.

மூலக்கதை