எஸ்பிஐ வங்கியின் 11 கிளைகளில் 3வது கட்டமாக மே 1-10 வரை தேர்தல் பத்திரங்கள் விற்பனை : மத்திய நிதியமைச்சகம் அறிவிப்பு

தினகரன்  தினகரன்

புதுடெல்லி: மூன்றாவது கட்ட தேர்தல் பத்திரங்கள் விற்பனை மே 1 முதல் 10ம் தேதி வரை நடைபெறும் என்று மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது. தேர்தல் கமிஷனால் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுக்கு நிதி அளிக்க விரும்புவோர் இனிமேல் தேர்தல் பத்திரங்கள் வாங்கி நன்கொடையாக வழங்கலாம் என்று மத்திய நிதியமைச்சகம் அறிவித்து இருந்தது. அரசியல் கட்சிகளுக்கு வழங்கப்படும் நிதியை முறைப்படுத்தவும், அதை வெளிப்படையானதாக மாற்றவும் இந்த நடவடிக்கையை பட்ஜெட்டில் மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி முதன் முதலில் அறிவித்தார். இதன்படி, இந்த தேர்தல் பத்திரங்கள் ஸ்டேட் பாங்க் (எஸ்பிஐ) மூலம் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன. எஸ்பிஐ வங்கி கிளைகளில் வழங்கப்படும் இந்த தேர்தல் பத்திரங்கள் 15 நாட்கள் வரை செல்லுபடியாகும். இதை தனிநபராகவோ அல்லது கூட்டாகவோ வாங்கி அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுக்கு வழங்கலாம். இந்த பத்திரங்களை வங்கியில் டெபாசிட் செய்த தினத்திலேயே அந்த கட்சியின் வங்கிக் கணக்கில் தேர்தல் பத்திரத்தில் குறிப்பிடப்பட்ட நிதி வரவு வைக்கப்படும். இந்த திட்டம் 2018 ஜனவரி முதல் அமலுக்கு வந்தது. மார்ச் 1 முதல் 10 வரையிலும், ஏப்ரல் 2 முதல் ஏப்ரல் 10 வரையிலும் இரண்டு கட்டமாக தேர்தல் பத்திரங்கள் விற்கப்பட்டன. தற்போது 3வது கட்டமாக மே 1 முதல் மே 10 வரை தேர்தல் பத்திரங்கள் விற்பனை செய்யப்படும் என்று மத்திய நிதியமைச்சகம் அறிவித்துள்ளது. எஸ்பிஐ வங்கியின் அங்கீகரிக்கப்பட்ட 11 கிளைகளில் இந்த பத்திரங்கள் விற்பனை செய்யப்படும். இந்த தகவலை மத்திய நிதியமைச்சகம் வெளியிட்டுள்ளது.

மூலக்கதை