மக்களவை தேர்தலுக்கு முன்னோட்டம்? தலித் வீட்டில் இரவு உணவு சாப்பிட்ட உபி முதல்வர்

தினகரன்  தினகரன்

லக்னோ: உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், தாழ்த்தப்பட்ட ஒருவருடைய வீட்டில் இரவு உணவு சாப்பிட்டார். மத்தியில், நான்கு ஆண்டுகால ஆட்சியை முடித்து, அடுத்த ஆண்டு மீண்டும் மக்களவைத் தேர்தலை பாஜ எதிர்நோக்கவுள்ளது. இதையொட்டி பல்வேறு திட்டங்களை மேற்கொண்டுள்ளது. இதன் ஒருபகுதியாக, தாழ்த்தப்பட்டவர்களை கவரும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது.இதனிடையே மக்களவை தேர்தலுக்கு முன்னோட்டமாக, உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், நேற்று கந்தைபூர் மதுப்பூர் கிராமத்தில் நடைபெற்ற கிராமக் கூட்டத்தில் கலந்து கொண்டார். அதில் மக்கள் தெரிவித்த உள்ளூர் பிரச்னைகளை பொறுமையாக அவர் கேட்டறிந்தார். பல்வேறு அரசு திட்டங்களின் நன்மைகள் ஒவ்வொரு தனிப்பட்ட மக்களுக்கும் சென்றுசேர வேண்டும் என்று கூறினார். ‘கிராம சுவராஜ் அபியான்’ திட்டத்தின்கீழ் மத்திய மாநில அரசுகள், பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருவதாகவும் மக்களுக்கு ஆதித்யநாத் தெரிவித்தார்.சாதாரண மக்களின் பிரச்னைகளுக்கு உடனடி தீர்வு காணப்பட வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார். இதில் மெத்தனப் போக்கு காணப்படுவதை அரசு ஒருபோதும் அனுமதிக்காது என்றும் அவர் தெரிவித்துள்ளார். இதையடுத்து அவர் தயாராம் சரோஜ் என்ற தாழ்த்தப்பட்டவரின் வீட்டில் தரையில் சம்மனமிட்டு அமர்ந்து இரவு உணவு சாப்பிட்டார். அவருடன் உள்ளூர் மக்களும் சாப்பிட்டனர். அடுத்த ஆண்டு மக்களவை தேர்தலையொட்டி, தலித்துகளை கவரும் வகையில், அவரது இந்த நடவடிக்கை உள்ளதாக பல்வேறு தரப்பினரும் தெரிவித்தனர். ஏனெனில், சமீபத்தில் உபி.யில் நடந்த இடைத்தேர்தலில் பாஜ படுதோல்வியை சந்தித்தது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை