திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு 60 லட்சம் மதிப்புள்ள திருக்கல்யாண ரதம் நன்கொடை : வெங்கையா நாயுடு மகன் வழங்கினார்

தினகரன்  தினகரன்

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு 60 லட்சம் மதிப்புள்ள திருக்கல்யாண ரதத்தை துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு மகன் நன்கொடையாக வழங்கினார். திருப்பதி ஏழுமலையான் கோயில் சார்பில் இந்து தர்ம பிரசாரத்திற்காக நாடு முழுவதும் உள்ள பகுதிகளில் சீனிவாச  திருக்கல்யாணம் நடத்தப்படுகிறது. அப்போது உற்சவ மூர்த்திகள் வாகனங்களில் வெளியூர்களுக்கு ஊர்வலமாக எடுத்து செல்லப்படுகிறது. இந்நிலையில் திருக்கல்யாணத்திற்காக சுவாமிகளை ஊர்களுக்கு கொண்டு செல்ல `திருக்கல்யாண ரதம்’’ என்ற பெயரில் வடிவமைக்கப்பட்ட ஒரு பஸ்சை, துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு மகன் ஹர்ஷவர்தன் திருப்பதி கோயிலுக்கு நேற்று நன்கொடையாக வழங்கினார்.திருப்பதி ஏழுமலையான் கோயில் எதிரே நேற்று காலை நடந்த நிகழ்ச்சியில் ஹர்ஷவர்தன், சிறப்பு பூஜைகள் செய்து, தேவஸ்தான இணை செயல் அலுவலர் சீனிவாசராஜூ முன்னிலையில் பஸ்சிற்கான சாவி மற்றும் ஆவணங்களை ஒப்படைத்தார். ஏசி வசதியுடன் கூடிய கல்யாண ரதம், சுவாமி திருக்கல்யாணத்திற்காக உற்சவர்களை வெளியூர்களுக்கு எடுத்து செல்வது, திருக்கல்யாணம் முடிந்த பின்னர் சுவாமி ஊர்வலம் நடத்துவது ஆகிய தேவைகளுக்கு ஏற்ற வகையில் 60 லட்சத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. அந்த பஸ் தேவஸ்தான போக்குவரத்து மேலாளர் சேஷாரெட்டியிடம் ஒப்படைக்கப்பட்டது.

மூலக்கதை