வேட்புமனுத்தாக்கல் முடிந்த நாளில் கர்நாடக அமைச்சர் மகாதேவப்பா வீட்டில் வருமான வரி சோதனை

தினகரன்  தினகரன்

மைசூரு: கர்நாடக  மாநில பொதுப்பணித்துறை அமைச்சராக இருக்கும் எச்.சி.மகாதேவப்பா வீட்டில்  நேற்று காலை வருமான வரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர். கர்நாடகாவில்  இவ்வாண்டு தொடங்கி நான்கு மாதங்களில் காங்கிரஸ் அமைச்சர்கள், கட்சியின்  முன்னணி தலைவர்கள் வீடுகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் அடிக்கடி சோதனை  நடத்தி வருகிறார்கள். இந்நிலையில்,  முதல்வர் சித்தராமையாவுக்கு வலதுகரமாக செயல்படுபவரும், மாநில  பொதுப்பணித்துறை அமைச்சருமான  எச்.சி.மகாதேவப்பாவுக்கு சொந்தமான மைசூரு   விஜயநகரில் உள்ள வீடு, பெங்களூரு டி.நரசிபுராவில் உள்ள வீடுகள் மற்றும்  அவரது மகன் போஸ் ஆகியோர் வீடுகளில் 10க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை  அதிகாரிகள் நேற்று காலை திடீரென சோதனை நடத்தினர். சட்டபேரவைக்கு நடக்கும் தேர்தலில்  டி.நரசிபுரா தொகுதியில் போட்டியிடும் மகாதேவப்பா, நேற்று காலை  பிரசாரத்திற்கு செல்ல தயாராகி கொண்டிருந்தபோது ஐ.டி அதிகாரிகள் வந்ததால்  தேர்தல் பிரசாரத்தை ரத்து செய்துவிட்டு வீட்டில் தங்கினார். அமைச்சர்  வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியதற்கு முதல்வர்  சித்தராமையா, கட்சியின் மேலிட பொறுப்பாளர் கே.சி.வேணுகோபால், மாநில தலைவர்  பரமேஸ்வர் உள்பட பலர் கண்டனம் தெரிவித்தனர்.‘‘பேரவை தேர்தல் சமயத்தில் ஐடி  அதிகாரிகள் சோதனை நடத்துவது சட்டப்படி தவறு. காங்கிரஸ் தலைவர்களை  பலவீனப்படுத்துவதற்காக மத்திய அரசு மேற்கொள்ளும் அரசியல் பழிவாங்கும் செயல்  இது. தேர்தல் அதிகாரிகள் இந்த விஷயத்தில் உரிய நடவடிக்கை எடுக்க  வேண்டும்’’ என்று அவர்கள் வலியுறுத்தினர். இதனிடையே, அமைச்சர் வீட்டில் நடத்திய சோதனையில் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளதற்கான  ஆவணங்கள் எதுவும் கிடைக்கவில்லை என்று தெரியவருகிறது.

மூலக்கதை