இறக்குமதியை தவிர்த்து உள்நாட்டில் பேட்டரி வாகன உற்பத்தியை அதிகரிக்க செய்ய புது உத்தி

தினகரன்  தினகரன்

புதுடெல்லி: பேட்டரி வாகன உற்பத்தியை உள்நாட்டில் அதிகரிக்கும் வகையில், கட்டாய உதிரி பாக உற்பத்தி அளவை இரட்டிப்பாக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. பெட்ரோல் மற்றும் டீசல் வாகனங்களை விட பேட்டரி கார்கள் சுற்றுச்சூழலை பாதிக்காதவை. இதனால் பேட்டரி கார்கள் உற்பத்தியை மத்திய அரசு ஊக்குவித்து வருகிறது. இதற்கான உதிரி பாகங்கள் பெரும்பாலும் வெளிநாடுகளில் இருந்துதான் இறக்குமதி செய்யப்படுகின்றன. தற்போது பேட்டரி வாகன உற்பத்தியில் 25 சதவீத உதிரி பாகங்கள் இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்டதாக இருக்க வேண்டும் என்ற கட்டாயம் உள்ளது. இதை 70 சதவீதமாக உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதுகுறித்து மத்திய அரசு அதிகாரி ஒருவர் கூறியதாவது: பேட்டரி வாகனங்களை உள்நாட்டிலேயே உற்பத்தி செய்யும்போது இவற்றின் விலை குறைய வாய்ப்புகள் உள்ளன. பேட்டரி விலை இந்த கார்களின் விற்பனை விலையில் முக்கிய பங்கு வகிக்கின்றன. இவை இறக்குமதி செய்யப்படுபவைதான். தற்போது பேட்டரி கார்களில் 35 சதவீத உதிரி பாகங்கள் உள்நாட்டில் உற்பத்தி செய்ததாக இருக்க வேண்டும் என்ற கட்டாயம் உள்ளது. இதை மூன்று ஆண்டில் 70 சதவீதமாக உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது. முதல் ஆண்டில் 50 சதவீதம், 2வது ஆண்டில் 60 சதவீதம் 3வது ஆண்டில் 70 சதவீதம் கட்டாய உதிரிபாக உற்பத்தி என படிப்படியாக உயர்த்த உள்ளோம். பேட்டரி உட்பட உதிரிபாக உற்பத்தியை இந்தியாவிலேயே மேற்கொள்ள முன்வரும் நிறுவனங்களுக்கு வரி விடுமுறை காலம் வழங்கப்படும். நாட்டின் ஒட்டுமொத்த வாகன விற்பனையில் பேட்டரி கார்கள் ஒரு சதவீதம்தான் உள்ளன. இதை சில ஆண்டுகளில் 5 சதவீதமாக உயரும் என்ற நம்பிக்கை உள்ளது. முழுமையாக பேட்டரி வாகனங்கள் கொண்ட நாடாக இந்தியாவை மாற்ற வேண்டும் என்பது மத்திய அரசின் கனவு. பேட்டரி வாகன பயன்பாடு அதிகமானால் சுற்றுச்சூழல் பாதிப்பில் இருந்து விடுபடுவதோடு பெட்ரோல், டீசல் இறக்குமதியும் பெருமளவு குறையும் என்றார்.

மூலக்கதை