சேவைக்கும் ஜிஎஸ்டி கேட்கிறது மத்திய அரசு ஏடிஎம்மில் ஒரு முறை பணம் எடுத்தாலும் கட்டணம் வசூலிக்க வங்கிகள் திட்டம்

தினகரன்  தினகரன்

புதுடெல்லி: வங்கிகள் அளிக்கும் சேவைக்கு 5 ஆண்டு முன்தேதியிட்டு வரி வசூலிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதுகுறித்து வங்கிகளுக்கும் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதை ஈடுகட்ட வாடிக்கையாளர்களிடம் கட்டணம் வசூலிக்க வங்கிகள் திட்டமிட்டுள்ளன. ஜிஎஸ்டி நுண்ணறிவு இயக்குநரகம் வங்கிகளுக்கு சமீபத்தில் ஒரு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. பாரத ஸ்டேட் வங்கி மற்றும் சில தனியார் வங்கிகளுக்கும் இந்த அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. இதில், வங்கிகள் வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சேவைகளை வழங்குகின்றன. சில கணக்குகள் ஜீரோ பேலன்ஸ் எனப்படும் குறைந்த பட்ச இருப்பு தொகை வைத்திருக்க தேவையில்லாத அடிப்படை வங்கி கணக்குகள். மற்றவை குறைந்த பட்ச இருப்பு தொகை பேணப்பட வேண்டிய கணக்குகள். நகரம், புறநகர், கிராமப்புறங்களுக்கு ஏற்ப இந்த இருப்பு தொகை மாறுபடும். குறைந்த பட்ச இருப்பு தொகை வைத்திருக்கும் கணக்குகளுக்கு காசோலை, ஏடிஎம் பரிவர்த்தனை உட்பட பல சேவைகளை வங்கிகள் இலவசமாக வழங்குகின்றன. ஆனால் ஜீரோ பேலன்ஸ் கணக்குகளுக்கு கட்டணத்துடன் சில சேவைகள் அளிக்கின்றன. இருப்பு தொகை வைத்திருப்பவர்களுக்கு வங்கிகள் இலவச சேவை அளித்தாலும், அவற்றின் மூலம் ஏதேனும் லாபம் கிடைப்பதால்தான் வங்கிகளால் வழங்க முடிகிறது. எனவே, அந்த லாபத்தொகையை பிற கட்டண சேவைகளுடன் கணக்கிட்டு அதற்கு 5 ஆண்டு முன்தேதியிட்டு ஜிஎஸ்டி வரி வசூலிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. என கூறப்பட்டுள்ளது. இதனால் வங்கிகள் கடும் அதிர்ச்சிக்கு ஆளாகியுள்ளன. இதுகுறித்து வங்கி அதிகாரி ஒருவர் கூறியதாவது:வாடிக்கையாளர்களுக்கு வழங்கிய சேவைகளுக்கு 5 ஆண்டு முன்தேதி கணக்கிட்டு வரி வசூலிக்க முடிவு செய்துள்ளனர். பல வாடிக்கையாளர்கள் கணக்குகளை மூடிவிட்டனர். இருக்கும் வாடிக்கையாளர்களிடம் திடீரென சம்பந்தப்பட்ட சேவைக்கான வரித்தொகையை வசூலிக்க முடியாது. அதேநேரத்தில் மொத்தமாக கணக்கிட்டால் இந்த வகையில் மட்டும் பல ஆயிரம் கோடி ரூபாயை வரியாக வங்கிகள் செலுத்த வேண்டிவரும். இந்த சுமையை வாடிக்கையாளர்கள் மீது சுமத்துவதை தவிர வங்கிகளுக்கு வேறு வழியில்லை. இதனால ்ஏடிஎம், காசோலை உட்பட தற்போது இலவசமாக அளிக்கப்படும் சேவைகளை நிறுத்த வேண்டிய நிலை ஏற்படலாம். எனினும் இந்த முடிவை எதிர்த்து முறையீடு செய்ய திட்டமிட்டுள்ளோம் என்றனர்.ரிசர்வ் வங்கி அறிவுறுத்தலின்படி, வாடிக்கையாளர் கணக்கு வைத்துள்ள ஏடிஎம்களில் மாதத்துக்கு 5 முறையும் பிற வங்கி ஏடிஎம்களில் 3 முறையும் இலவசமாக பணம் எடுக்க வங்கிகள் அனுமதிக்கின்றன. ஏற்கெனவே வங்கிகள் கோரிக்கைப்படிதான் இலவச பரிவர்த்தனை எண்ணிக்கை குறைக்கப்பட்டது. வங்கிகள் சேவைக்கு வரி செலுத்த வேண்டியது இறுதி முடிவாகிவிட்டால் ஒரு முறை ஏடிஎம்மில் பணம் எடுத்தால் கூட கட்டணம் வசூலிக்க வேண்டிய நிர்பந்தம் வங்கிகளுக்கு ஏற்பட்டு விடும் என்று வங்கி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மூலக்கதை