சீனா, வங்கதேசத்திற்கு நூல் ஏற்றுமதி அதிகரிப்பு : நூற்பாலைகளில் மே மாதம் வரை ஆர்டர்

தினகரன்  தினகரன்

கோவை: சீனா, வங்கதேசத்திற்கு நூல், துணி மற்றும் வீட்டு உபயோக ஜவுளி பொருட்கள்  ஏற்றுமதி அதிகரித்துள்ளதால், நூற்பாலைகளில் மே மாதம் வரை நூல் கொள் முதலுக்கான ஆர்டர் கொடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் பருத்தி நூல், துணி, வீட்டு உபயோக ஜவுளி பொருள்கள் ஏற்றுமதி கடந்த 6 மாதத்திற்கு மேலாக மந்தம் அடைந்திருந்தது. கடந்த பிப்ரவரியில் 5,515 கோடிக்கு ஏற்றுமதி செய்யப்பட்டிருந்தது. மார்ச் மாதத்தில் ஏற்றுமதி 1,121 கோடி அதிகரித்து 6,636 கோடியாக உள்ளது. கடந்த ஆண்டு மார்ச் மாதத்துடன் ஒப்பிடுகையில் இது 12.79 சதவீதம் வளர்ச்சி. இதே போல் செயற்கை நூல், செயற்கை நூலிழை துணி மற்றும் செயற்கை நூலிழை வீட்டு உபயோக ஜவுளிப்பொருள்கள் ஏற்றுமதி மார்ச் மாதத்தில் 5.44 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது.இதுகுறித்து ஜவுளித்துறையினர் கூறுகையில், ‘கடந்த 3 மாதங்களாக பஞ்சு விலை ஒரு கண்டி (170 கிலோ) 42 ஆயிரம் வரை இருந்தது. இதனால் நூல் விலையும் ஒரே நிலையில் சீராக இருந்தது. மேலும் சீனா, பங்களாதேஷ் உள்ளிட்ட நாடுகளில் உள்நாட்டு தேவைக்கான நூல் பற்றாக்குறையாக இருந்ததால் ஜவுளி பொருட்களை வெளிநாடுகளில் கொள்முதல் செய்தனர். அப்போது நமது நாட்டின் நூல் விலை பிற நாடுகளை விட குறைவாக இருந்ததால், நமது நாட்டில் இருந்து நூல் மற்றும் துணி உள்ளிட்ட வீட்டு உபயோக ஜவுளி பொருட்களை கொள்முதல் செய்தனர். இதனால் ஏற்றுமதி அதிகரித்துள்ளது. இதே நிலை வரும் மாதங்களில் நீடிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் நூற்பாலைகளில் வரும் மே மாதம் வரையிலான நூல் உற்பத்தியை கொள்முதல் செய்ய வர்த்தகர்கள் இப்போதே ஆர்டர் கொடுத்து விட்டனர். ,நூல் விலையும் அதிகரித்துள்ளது என்றனர்.

மூலக்கதை