நீலகிரியில் இயங்கிய ஒரே பொதுத்துறை நிறுவனமான ஊட்டி எச்.பி.எப். தொழிலாளர் 167 பேருக்கு கட்டாய விருப்ப ஓய்வு

தினகரன்  தினகரன்

ஊட்டி: ஊட்டியில் இயங்கி வந்த ஒரே பொதுத்துறை நிறுவனமான எச்.பி.எப். தொழிற்சாலையில் மீதம் உள்ள 167 தொழிலாளர்களுக்கும் கட்டாய விருப்ப ஓய்வு அளிக்கப்பட்டது. இதன்மூலம் 50 ஆண்டுகால எச்.பி.எப். ஆலை வரலாறு முடிந்தது. தெற்கு ஆசியாவிலேயே ஒரே போட்டோ பிலிம் தயாரிக்கும் ஆலையான இந்துஸ்தான் போட்டோ பிலிம் தொழிற்சாலை, கடந்த 50 ஆண்டுக்கு முன் ஊட்டியில் உள்ள இந்து நகரியில் துவக்கப்பட்டது. ஆரம்பத்தில் இந்த தொழிற்சாலை கொடி கட்டி பறந்தது. இங்கு தயாரிக்கப்பட்ட கருப்பு வெள்ளை பிலிம்கள் மற்றும் எக்ஸ்ரே பிலிம்கள் பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டன. 1990ல் உலக மயமாக்கல் கொள்கையால், பல்வேறு வெளிநாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் காலடிவைக்கவே, உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட பிலிம்களின் மவுசு குறைய துவங்கியது. இதனால் எச்.பி.எப். தொழிற்சாலை நஷ்டத்திற்கு தள்ளப்பட்டது. தொடர்ந்து பல ஆயிரம் கோடி நஷ்டத்திற்கு செல்லவே, இந்த தொழிற்சாலையை நலிந்த தொழிற்சாலைகள் பட்டியலில் மத்திய கனரகத்துறை கொண்டு வந்தது. அதன்பின், இந்த தொழிற்சாலையில் பணியாற்றியவர்களை விருப்ப ஓய்வில் செல்ல தொழிற்சாலை நிர்வாகம் ேகட்டுக் கொண்டது.ஏராளமான தொழிலாளர்கள் மற்றும் அதிகாரிகள் அப்போது விருப்ப ஓய்வில் சென்றனர். மேலும், தொழிற்சாலையும் மூடப்பட்டது. உற்பத்தி முழுமையாக நிறுத்தப்பட்டது. ஆனால், 167 தொழிலாளர்கள் மற்றும் அதிகாரிகள் மட்டும் விருப்ப ஓய்வில் செல்லவில்லை.  தொழிற்சாலையை புனரமைக்க வேண்டும் அல்லது வேறு தொழில் தொடங்கி தங்களுக்கு தொடர்ந்து வேலை அளிக்க வேண்டும் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இவர்களுக்கு நேற்று கட்டாய விருப்ப ஓய்வில் செல்லவும், தொடர்ந்து தொழிற்சாலைக்குள் வரக்கூடாது என தொழிற்சாலை முன் நோட்டீஸ் ஒட்டப்பட்டது. நோட்டீசில், `கடந்த 2016ம் ஆண்டுக்கு பின் பணியில் உள்ளவர்களுக்கு ஊதியம் வழங்கப்படமாட்டாது. தற்போது தொழிற்சாலை குடியிருப்பில் உள்ளவர்களின் வாடகை, வருமான வரி உட்பட பல்வேறு பிடித்தங்கள் செய்யப்பட்ட பின், ஓய்வூதிய தொகை வங்கி கணக்கில் செலுத்தப்படும். வங்கிக் கணக்கில் செலுத்திய 30 நாட்களுக்குள் தொழிற்சாலை குடியிருப்பில் இருந்து வெளியேற வேண்டும். இனி யாரும் தொழிற்சாலை வளாகத்திற்குள் வரக் கூடாது’ என்று அறிவிக்கப்பட்டுள்ளது.  இதனை கண்ட தொழிலாளர்கள் அதிர்ச்சியும், கலக்கமும் அடைந்தனர். இதனால் 50 ஆண்டுகளான எச்.பி.எப். தொழிற்சாலை வரலாறு முடிவுக்கு வந்தது.

மூலக்கதை