ஒரு ஆப்பிளை எடுத்து வந்தது குத்தமாய்யா? விமான பெண் பயணிக்கு 33,000 அபராதம்

தினகரன்  தினகரன்

வாஷிங்டன்: அமெரிக்க விமான நிலையத்தில் ஒரு பெண்ணின் கைப்பையில் விமானத்தில் கொடுத்த ஆப்பிள் இருந்ததால் அவருக்கு கஸ்டம்ஸ் அதிகாரிகள் ரூ.33 ஆயிரம் அபராதம் விதித்தனர். கிரிஸ்டன் டேட்லாக் என்ற பெண்மணி பிரான்சில் இருந்து அமெரிக்கா வந்துள்ளார். கிரிஸ்டன் வந்த டெல்டா ஏர்லைன்ஸ் அமெரிக்காவின் மின்னபோலீஸ் விமான நிலையத்தில் தரையிறங்கியுள்ளது. இதனைத்தொடர்ந்து விமானத்தில் இருந்து வந்த கிறிஸ்டோபரிடம் கஸ்டம்ஸ் அதிகாரிகள் சோதனை செய்துள்ளனர். அப்போது கிரிஸ்டன் கைப்பையில் ஆப்பிள் ஒன்று இருந்துள்ளது. இதனை பறிமுதல் செய்த அதிகாரிகள் ஆப்பிள் எடுத்து வந்ததற்காக ரூ.33 ஆயிரம் அபராதம் செலுத்தும்படி தெரிவித்துள்ளனர். இதனை கேட்ட கிரிஸ்டன் அதிர்ச்சி அடைந்தார். மேலும் இது டெல்டா ஏர்லைன்சில் சாப்பிடுவதற்காக கொடுத்த ஆப்பிள் என்றும், பிறகு சாப்பிடலாம் என்று எடுத்து வைத்திருந்ததாகவும் தெரிவித்தார். நான் இதனை இப்ேபாதே சாப்பிட்டு விடுகிறேன் இல்லையென்றால் தூக்கி எறிந்து விடுகிறேன் என்றும் அவர் கூறியுள்ளார். ஆனால் இதனை ஏற்க மறுத்த அமெரிக்க கஸ்டம்ஸ் அதிகாரிகள் அவர் அபராதத்தை செலுத்தியே ஆகவேண்டும் என்று கட்டாயப்படுத்தியுள்ளனர். இதனையடுத்து வேறுவழியின்றி கிரிஸ்டன் அபராத தொகையை செலுத்திய பின்னர் அங்கிருந்து சென்றார். இது தொடர்பாக வழக்கு தொடர உள்ளதாக கிரிஸ்டன் தெரிவித்துள்ளார்.  டெல்டா ஏர்லைன்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அமெரிக்க கஸ்டம்ஸ் மற்றும் எல்லை பாதுகாப்பு நெறிமுறைகளை பின்பற்றும்படி எங்களது வாடிக்கையாளர்களிடம் தெரிவித்து வருகிறோம்’’ என்று தெரிவித்துள்ளது.

மூலக்கதை