கர்நாடகா தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிட எடியூரப்பா மகனுக்கு வாய்ப்பு மறுப்பு : ஆதரவாளர்கள் ஆர்பாட்டம்

தினகரன்  தினகரன்

பெங்களூரு : கர்நாடகா பாஜக தலைவர் எடியூரப்பா மகனுக்கு வருணா தொகுதியில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டதை கண்டித்து அவரது ஆதரவாளர்கள் ஆர்பாட்டம் மற்றும் மறியல் போராட்டம் நடத்தினர். மைசூரு மாவட்டம் வருணா தொகுதியில் எடியூரப்பாவின் மகன் விஜேந்திரா போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கட்சித்தலைமை அவருக்கு வாய்ப்பு வழங்கவில்லை. இதனை கண்டித்து மைசூரு, வருணா உள்ளிட்ட இடங்களில் விஜேந்திரனின் ஆதரவாளர்கள் ஆர்பாட்டம் நடத்தினர். இதையடுத்து நிலைமையை சமாளிக்க முடியாத போலீசார் அவர்கள் மீது தடியடி நடத்தினர். இதனால் அங்கு பதற்றம் நிலவியது. தனது மகனுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டதால் அதிருப்தி அடைந்த எடியூரப்பாவிடம், பாஜகவின் மூத்த தலைவர்கள் சுமார் 2 மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவ்டேகர், விஜேந்திரனுக்கு மாநில இளைஞர் அணி பொதுச்செயலாளர் பதவி வழங்க கட்சி மேலிடம் முன் வந்துள்ளதாக தெரிவித்துள்ளார். வருணா தொகுதியில் சாதாரண பாஜக தொண்டருக்கே வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது என்றும், இதற்கான பேச்சுவார்த்தை சுமுகமாக முடிந்துள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய எடியூரப்பா, வருணா தொகுதியில் விஜயேந்திரா போட்டியிட மாட்டார், பா.ஜனதா சார்பில் சாதாரண தொண்டரே போட்டியிடுவார் என்று கூறியுள்ளார். வருணா, சாம்ராஜ் தொகுதியில் விஜேந்திரா பரப்புரை செய்வார் என்று தெரிவித்துள்ளார். மேலும் எங்களது முடிவை விஜேந்திரா ஏற்றுக்கொண்டார், தொண்டர்களும் இதனை ஏற்று கட்சியின் வெற்றிக்காக பாடுபட வேண்டும் என்று எடியூரப்பா கூறியுள்ளார். எடியூரப்பாவின் இந்த அறிவிப்பால் ஏமாற்றம் அடைந்த தொண்டர்கள் அவருக்கு எதிராகவும், கட்சியின் தேசிய தலைவர் அமித்ஷாவுக்கு எதிராகவும் கோ‌ஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்நிலையில், இந்த சம்பவம் குறித்து தனது டுவிட்டரில் குறிப்பிட்டுள்ள விஜயேந்திரா, நான் எப்போதுமே கட்சியின் முடிவுகளுக்கு முழு மனதுடன் ஆதரவு அளித்து வந்துள்ளேன். எனது தந்தை எடியூரப்பாவின் தலைமையில் கர்நாடகத்தில் பா.ஜனதா ஆட்சி மலர வேண்டும் என்பதற்காக தொடர்ந்து பணியாற்றுவேன் என்று தெரிவித்துள்ளார். வருணா தொகுதியில் முதல்வர் சித்தராமையாவின் மகன் யதீந்திரா காங்கிரஸ் சார்பில் போட்டியிட உள்ளது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை