5வது தோல்வியால் இக்கட்டான நிலை பேட்ஸ்மேன்கள் கைவிட்டு விட்டனர்: டெல்லி கேப்டன் கம்பீர் வேதனை

தமிழ் முரசு  தமிழ் முரசு
5வது தோல்வியால் இக்கட்டான நிலை பேட்ஸ்மேன்கள் கைவிட்டு விட்டனர்: டெல்லி கேப்டன் கம்பீர் வேதனை

டெல்லி: டெல்லியில் நேற்று இரவு நடைபெற்ற, ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரின் 22வது லீக் போட்டியில், டெல்லி டேர்டெவில்ஸ்-கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப், 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 143 ரன்கள் மட்டுமே எடுத்தது.

கருண் நாயர் 34, மில்லர் 26 ரன்கள் எடுத்தனர். பிளங்கெட் 3, டிரென்ட் போல்ட், அவேஸ் கான் தலா 2, டேனியல் கிறிஸ்டியன் 1 விக்கெட் வீழ்த்தினர்.

பின்னர் பேட்டிங் செய்த டெல்லி, 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 139 ரன்கள் மட்டுமே எடுத்து, 4 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. ஸ்ரேயாஸ் அய்யர் 57 (45 பந்துகள், 5 பவுண்டரி, 1 சிக்சர்) எடுத்தாலும், மற்ற பேட்ஸ்மேன்கள் குறிப்பிடத்தகுந்த வகையில் விளையாடவில்லை.

அங்கிட் ராஜ்புட், ஆண்ட்ரூ டை, முஜீப் ரகுமான் தலா 2, பரிந்தர் சரண் 1 விக்கெட் வீழ்த்தினர்.

இரு அணிகளுக்கும் இது 6வது போட்டியாகும்.

பஞ்சாப் அணி 5வது வெற்றியையும், டெல்லி 5வது தோல்வியையும் சந்தித்துள்ளன. தோல்வி குறித்து டெல்லி கேப்டன் கவுதம் கம்பீர் கூறுகையில், ‘’முதல் 6 ஓவர்களில் நாங்கள் 3 விக்கெட்களை இழந்திருந்தோம்.

இதன்மூலம் பஞ்சாப் அணி மீண்டும் போட்டிக்குள் வர நாங்கள் அனுமதித்து விட்டோம். நாங்கள் ஸ்கோர் செய்தோம் என்றாலும், விக்கெட்களையும் அதிகமாக இழந்தோம்.

எங்கள் பந்து வீச்சாளர்கள் மிகவும் சிறப்பாக செயல்பட்டு, பஞ்சாப் பேட்ஸ்மேன்களை கட்டுப்படுத்தினர். ஆனால் எங்கள் பேட்ஸ்மேன்கள் சிறப்பாக விளையாடவில்லை.



எங்கள் பேட்ஸ்மேன்களால், தங்களின் வேலையை சரியாக செய்து முடிக்க இயலவில்லை. எனினும் எங்கள் அணியின் ஸ்ரேயாஸ் அய்யர், அவேஸ் கான் போன்றவர்கள் சிறப்பாக செயல்பட்டதை பாசிட்டிவ்-ஆக எடுத்து கொள்ளலாம்.

எங்கள் அணியின் பிரித்வி ஷாவுக்கும் நல்ல எதிர்காலம் உள்ளது. எங்களுக்கு இன்னும் 8 போட்டிகள் உள்ளது.

இதில், குறைந்தபட்சம் 7 போட்டிகளிலாவது வெல்ல வேண்டும். இதற்கு சிறப்பாக விளையாட வேண்டியது அவசியம்’’ என்றார்.

பஞ்சாப் அணி தனது அடுத்த போட்டியில், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியை எதிர்த்து விளையாடுகிறது.

இந்த போட்டி வரும் 26ம் தேதி நடைபெறுகிறது. டெல்லி அணி தனது அடுத்த போட்டியில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்த்து விளையாடுகிறது.

இந்த போட்டி வரும் 27ம் தேதி நடைபெறுகிறது.

அங்கிட் ராஜ்புட் ஆட்ட நாயகன்
ஆட்ட நாயகன் விருது வென்ற பஞ்சாப் வீரர் அங்கிட் ராஜ்புட் (4-0-23-2) கூறுகையில், ‘’மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.

நாங்கள் குறைவான ரன்களையே எடுத்திருந்தோம். இந்த சூழ்நிலையில், கேப்டன் நம்மிடம் பொறுப்பை கொடுத்தால், சிறப்பாக செயல்பட்டு விக்கெட்களை வீழ்த்த வேண்டும் என நினைத்தேன்.

ஏனெனில் குறைவான ரன்கள் அடிக்கப்பட்ட போட்டியில் அணி வெற்றி பெற உதவ வேண்டும் என்பதை நான் விரும்பினேன்’’ என்றார்.


.

மூலக்கதை